அரச நிறுவனங்களின் கொடுப்பனவுகளை செலுத்த இலகுவான முறை: வடக்கு ஆளுநரின் பாராட்டு
அரச நிறுவனங்களின் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை வீட்டிலிருந்தவாறு செலுத்தக்கூடிய முறைமை உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற 'GovPay' செயலியின் அறிமுகம் மற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இன்று இலங்கை மின்சார சபையின் மின்பட்டியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பலரும் வீட்டிலிருந்தே செலுத்துகின்றார்கள். வீண் அலைச்சல், நேர விரயத்தை இல்லாமல் செய்தல் என்பவற்றையே பலரும் விரும்புகின்றார்கள்.
நிர்வாகச் செலவீனங்கள்
தற்போதுள்ள சூழலில் கணவன் மற்றும் மனைவி இருவருமே தொழில் செய்பவர்களாக உள்ளனர். அவ்வாறான நிலையில் அரசாங்க நிறுவனங்களின் சேவைகளுக்குரிய கட்டணங்களை அரச அலுவலகங்களுக்கு நேரில் சென்று குறித்த நேரத்துக்குள் செலுத்துவது என்பது மிகப் பெரிய சவாலாக மாறி வருகின்றது.
எனவே, இவ்வாறு வீட்டிலிருந்தே எமது கொடுப்பனவுகளைச் செய்யக் கூடிய சேவைகள் மிக அவசியமானவையே. இத்தகைய எண்ணிமைப்படுத்தல் ஊடான சேவைகளால் ஊழல் மோசடிகள் குறைவடையும்.
இந்தச் சேவைகள் வெளிப்படைத்தன்மையானது. தரவுகளை இலகுவாகவும் பெற்றுக் கொள்ள முடியும். இதன் ஊடாக நிர்வாகச் செலவீனங்கள் கூட அரச நிறுவனங்களுக்கு குறைவடையும்.
அத்துடன், அரச நிறுவனங்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்தவும் இது உதவும். இதுவரை 135 அரச நிறுவனங்கள் இந்தச் செயலியில் இணைந்துள்ளதுடன் அவற்றின் ஊடான 700இற்கும் மேற்பட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









