GovPay டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பதிவாகியுள்ள விசேட அம்சம்
2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையின் அரச டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் தளமான GovPay, 2 பில்லியன் ரூபா மொத்த கொடுக்கல் வாங்கல் பெறுமதியைத் தாண்டியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதில் இறுதி ஒரு பில்லியன் ரூபாவானது வெறும் 45 நாட்கள் போன்ற குறுகிய காலப்பகுதிக்குள் எட்டப்பட்டமை ஒரு விசேட அம்சமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவலில் மேலும், 2025 பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை 69,000க்கும் மேற்பட்ட டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன.
அரச சேவைகளுக்கான கொடுப்பனவு
தற்போது 215 அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான 3,372 அரச சேவைகளுக்காக இத்தளத்தின் ஊடாகக் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.
அதேபோன்று 2025 ஏப்ரல் 10ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி போக்குவரத்து அபராதக் கொடுப்பனவு முறைமை ஊடாக 50,000க்கும் மேற்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மூலம் 66 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

தற்போது மேல், தென், வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அதிவேக நெடுஞ்சாலைகளிலும் நடைமுறையிலுள்ள இந்த போக்குவரத்து அபராதக் கொடுப்பனவு சேவையானது, 2026 ஜனவரி மாதத்தில் மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
வட மாகாணத்தின் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களும், தென் மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலகங்களும் ஏற்கனவே இந்த முறைமையுடன் இணைக்கப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களையும் டிஜிட்டல் மயமாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும்.
அதிக பங்களிப்பை வழங்கிய நிறுவனங்கள்
கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம், இலங்கை பொலிஸ் திணைக்களம், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம், மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை அணுசக்தி சபை ஆகியன 2025ஆம் ஆண்டில் அதிக பங்களிப்பை வழங்கிய நிறுவனங்களாகும் என அமைச்சு அறிவித்துள்ளது.

மேலதிகமாக, 2025 நவம்பர் மாதம் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளின் போது 'இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் அனர்த்த நிவாரண நிதியத்திற்காக' சுமார் 14 மில்லியன் ரூபாவைத் திரட்டுவதற்கும் இந்த GovPay தளம் பங்களிப்பு வழங்கியுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) மற்றும் லங்காபே (LankaPay) ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டம், 2030ஆம் ஆண்டளவில் 15 பில்லியன் அமெரிக்க டொலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri