யாழில் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக ஆளுநரின் நடவடிக்கை - எழுந்துள்ள கடும் கண்டனம்
யாழ்ப்பாணத்திலிருந்து (Jaffna) வெளிவரும் பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு எதிராக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொலிஸ் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண ஊடக அமையம் தனது வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது.
விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியவர்கள்
யாழ். ஊடக அமையம் (Jaffna press cub) வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மக்களிற்கு சேவையாற்றவென அரச நிதியிலிருந்து சம்பளம் பெறுகின்ற எந்தவொரு அரச பணியாளரும் தமது சேவைகள் தொடர்பில் சமானியன் ஒருவனது விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொள்ள வேண்டியவர்கள் என்பது பரகசியமான தொன்றல்ல.
அவ்வகையில் வடக்கு ஆளுநரும் அவரது நிர்வாக கட்டமைப்பும் விதிவிலக்காகவும் முடியாது. இலங்கை போன்ற ஜனநாயக நாடொன்றில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கழுத்தை நெரித்து தடுக்க ஆட்சியாளர்கள் கங்கணங்கட்டிக்கொண்டு செயற்படுவது தெரிந்ததொன்றே.
அதிலும் சமூக ஊடகங்களை முடக்கிவிடவென இலங்கை அரசு (Srilankan government) அனைவரது எதிர்ப்புக்களிற்கும் மத்தியில் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்யுமாறு சர்வதேச சமூகம் தொடர்ந்தும் வலியுறுத்தியே வருகின்றது.
ஆனால் ஆட்சியாளர்களோ தேர்தல் வெற்றிக்கான கனவில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முடக்கிவிட தொடர்ந்தும் முனைப்பு காண்பித்தே வருகின்றனர்.
நாளிதழ் ஆசிரியரை மிரட்டி
இத்தகைய சூழலில் நல்லாட்யொன்றை எதிர்பார்த்து தீட்டப்பட்ட ஆசிரிய தலையங்கமொன்றிற்கு எதிராக பொலிஸாரைப் பயன்படுத்தி நாளிதழ் ஒன்றின் ஆசிரியரை மிரட்டி அடிபணிய வடக்கு ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை கேலிக்குரியதொன்றாகவே உள்ளது.
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள திராணியற்றதாகவோ அல்லது பாராட்டத்தக்க நிர்வாக கட்டமைப்பு ஒன்றினை தோற்றுவித்து பாராட்டு பெற்றுக்கொள்ளவோ வடக்கு ஆளுநர் தவறியே உள்ளமை இத்தகைய அச்சுறுத்தல் பாரம்பரியத்தினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் தேசிய ஊடகத்துறை கடந்து வந்திருந்த பாதையொன்றும் மகிழ்ச்சிகரமானதாக கடந்த காலங்களில் இருந்திருக்கவில்லை. அது மரணங்களும் வலிகளும் நிரம்பியதாகவே இருந்திருந்தது.
கட்டவிழ்த்துவிட்ட வன்முறை
வடகிழக்கு தமிழர் தாயகங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் மீது கடந்த காலங்களில் அரச இயந்திரம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளால் 39 பேர் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான ஊடகவியலளார்கள் நாட்டை விட்டு உயிருக்கஞ்சி வெளியேறிய இருண்ட நாட்கள் பற்றியெல்லாம் வடக்கு ஆளுநர் சிலவேளைகளில் அறிந்திருக்காதிருக்கலாம்.
ஆனால் அவற்றினையெல்லாம் தாண்டி பயணித்த ஊடக வரலாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழ்களிற்கும் பணியாற்றிய ஊடகவியலாளர்களிற்கும் உள்ளதென்பதை மீண்டுமொரு முறை ஆளுநர் கவனத்திறகு எடுத்து செல்ல விரும்புகின்றோம்.
நல்லாட்சி தொடர்பில் கேள்வி
ஊடகவியலாளர்களது மரணங்களிற்கு நீதி கோரிய கோவைகள் பலவும் இதே பொலிஸ் களஞ்சியங்களில் கிடப்பிலுள்ளமையும் இரகசியமொனதொன்றல்ல.
அவ்வகையில் மக்கள் வரிப்பணத்தில் நல்லதொரு மக்கள் சேவையினை வடமாகாணசபை வழங்கவேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பில் எழுதப்பட்ட ஆசிரிய தலையங்கங்களை தம்மை செம்மைப்படுத்த முன்வைக்கப்பட்டதொரு கருத்தாக கவனத்தில் கொள்ள வடக்கு ஆளுநர் தவறியமை நல்லாட்சி தொடர்பில் கேள்விகளையே எழுப்பி நிற்கின்றது.
கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முடக்கிய பின்னராக முன்னெடுக்கப்படும் எந்தவொரு நிர்வாக நடவடிக்கையும் சர்வாதிகாரத்தின் சின்னமாக பார்க்கப்படுமென்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றது என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |