குடிநீருக்கான இணைப்பினை உடனடியாக வழங்க ஆளுநர் நஸீர் அஹமட் உத்தரவு
குடிநீர்ப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மல்லவப்பிட்டி மக்களுக்கு உடனடியாக குடிநீருக்கான இணைப்பு வழங்க ஆளுநர் நஸீர் அஹமட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
குருநாகல் மாவட்டத்தின் மல்லவப்பிட்டி பிரதேச உள்ள மக்கள் நீண்ட காலமாக எதிர் கொண்டிருந்த குடி நீர்ப் பிரச்சினையை ஆளுநர் நஸீர் அஹமட் அதிரடி உத்தரவொன்றின் மூலம் துரித கதியில் தீர்த்து வைத்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட முல்லைத்தீவு விஜிந்தன் தொடர்பில் கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
குருநாகல் நகர சபையின் எல்லைக்குட்பட்ட மல்லவப்பிட்டி கிராமத்தில் சுமார் 1500 குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இந்நிலையில் இங்குள்ள நில அமைப்பு காரணமாக நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக தங்களது கிராமப் பிரதேசத்திற்கு குடி நீர் இணைப்புகள் வழங்குமாறு குறித்த கிராமவாசிகள் மிக நீண்ட காலமாக உரிய அதிகாரிகளிடம் பல்வேறு வழிகளில் கோரிக்கையினை முன் வைத்திருந்தனர்.
எனினும் குருநாகல் மாநகர சபையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீர் விநியோக இணைப்புகளை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொறுப்பில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாக புதிய இணைப்புகளை தற்போதைக்கு வழங்க முடியாத நிலை காணப்படுவதாக கிராமவாசிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக குறித்த கிராமவாசிகள் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டு வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆளுநரின் தலையீடு
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக ஆளுநர் நஸீர் அஹமட்டின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து மல்லவப்பிட்டி பிரதேச மக்களுக்கு துரித கதியில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரையினை ஆளுநர் விடுத்தார்.
அதன் பிரகாரம் நேற்று முன்தினம் (24.06.2024) மல்லவப்பிட்டி பிரதேச மக்களுக்கான குடிநீர் இணைப்புகள் வழங்கும் செயற்பாடு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பள்ளிவாசலில் கூடிய மக்கள்
மல்லவப்பிட்டி தாருல் ஹஸனாத் பள்ளிவாசலில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் கலந்து கொண்டிருந்தார்.
மல்லவப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு சுமார் 200 வரையான புதிய குடிநீர் இணைப்புகள் இதன் மூலம் வழங்கப்படவுள்ளது.
அத்துடன் கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், குப்பை அகற்றும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்திய ஆளுநர் நஸீர் அஹமட், அவற்றையும் விரைவில் தீர்த்துவைப்பதற்கு முயற்சிப்பதாக உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் குருநாகல் மாநகர ஆணையாளர் அஜந்த, நீர்வழங்கல் சபையின் பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் சமன், ஹஸனாத் பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம். நாசிம் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |