விமானங்களை இயக்க வெளிநாட்டு விமானிகளை அரசாங்கம் அழைக்கும்! நிமல் சிறிபால டி சில்வா
ஸ்ரீலங்கன் விமான சேவையின் அனைத்து விமானிகளும் நாட்டை விட்டு வெளியேறினால், தேசிய விமான சேவையை நடத்துவதற்கு வெளிநாட்டு விமானிகளை அரசாங்கம் அழைக்கும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் மீது நேசம் இல்லாதவர்கள் சிறந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக நாட்டை விட்டு வெளியேறக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் ஏனைய தொழில் வல்லுனர்களுக்கு இந்த நிலைமை பொதுவானது. இது உலகில் எல்லா இடங்களிலும் பொதுவானது. அவர்கள் வேறு இடங்களில் அதிக ஊதியம் பெறலாம்.
இலங்கையில் வாழ்வது போன்ற வசதி கிடைக்காது
அவர்கள் துபாய் அல்லது சிங்கப்பூர் சென்றால் அவர்களின் வீட்டு வாடகை அதிகமாக உள்ளது, அவர்களின் குழந்தைகளின் பள்ளி கட்டணம் அதிகமாக உள்ளது, அவர்களின் வாழ்க்கை செலவு அதிகமாக உள்ளது. ஆனால் இலங்கையில் வாழ்வது போல் வசதியாக வாழ மாட்டார்கள்.
லண்டனில் உள்ள ஒரு மருத்துவருக்கு மாதம் 5,000 பவுண்டுகள் கிடைக்கும் அதேசமயம், இலங்கையில் அவர்களுக்கு 150,000 ரூபா மட்டுமே கிடைக்கும்.
மத்திய கிழக்கில் வீட்டு வேலை செய்பவர்கள் 150,000 ரூபா சம்பாதிப்பார்கள், அதேசமயம் இங்கு 75,000 ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
ஸ்ரீலங்கன் விமான சேவையில் தற்போது 216 விமானிகள் உள்ளனர். இந்த நிலையில் அனைத்து விமானிகளும் வெளியேறினால், வெளிநாட்டு விமானிகள் மூலம் சேவையை இயக்க வைப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |