உயர்தர வர்க்கத்தினரை அமைதிப்படுத்த முயற்சிக்கும் அரசாங்கம்: சுமந்திரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
கஸ்டப்படுகின்ற விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் நிவாரணம் தொடர்பில், வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழிவு தரப்பட்டுள்ள போதும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இதனை இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடு
மேலும் தெரிவிக்கையில்,“நாட்டில் இன்று பெட்ரோல்,சுப்பர் டீசல் விநியோகத்தை அரசாங்கம் ஊக்கப்படுத்தி வருகின்றது. ஆனால் மண்ணெண்ணெய்க்கு தட்டுபாடு நிலவுகின்றது.
அரசாங்கம் தற்போது, உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவாமல், உயர்தர வர்க்கத்தினரையும், மத்திய வர்க்கத்தினரையும் அமைதிப்படுத்த முயற்சிக்கின்றது.
இதேவேளை போராட்டங்கள் இடம்பெறும் போது அதனை பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு அடக்க முயற்சிக்கின்றது. 500 பேர் போராட்டம் நடத்தினால், அதனை அடக்குவதற்கு ஆயிரம் காவல் துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் சாதாரணமாக ரணில் விக்ரமசிங்க, அறிவித்தல்களில் ஆங்கிலத்தில் கையொப்படும் இடுகின்ற போது, போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கான ஆவணத்தில் அவர் சிங்களத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியம் இன்று விடுத்துள்ள அறிவிப்பின் கீழ் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முன்னதாக ஜப்பான், இலங்கை தொடர்பில் கடன் வழங்குனர் மாநாட்டை நடத்த ஆர்வத்தை வெளியிட்ட போதும் தற்போது அதற்கு உடன்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
இதனை தவிர வெட் வரி போன்ற மறைமுக வரிகளை விதிப்பதன் மூலம் பொருளாதாரம் மீண்டும் மீண்டும் நெருக்கடிகளுகே செல்லும்.
எனவே மனித உரிமைகளுக்கு இடம் தருவதன் மூலம் சர்வதேச சமூகத்திடம் இருந்து உதவிகளை பெற்று நாட்டை முன்னேற்ற முடியும்.”என தெரிவித்துள்ளார்.