விரைவில் 50 வழக்குகளை தாக்கல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை
நீண்டகாலமாக நடைபெற்று வரும் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைகள் தொடர்பாக விரைவில் 50 வழக்குகளை தாக்கல் செய்ய, கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த குற்றச்சாட்டுக்களின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ள பெரும்பாலான குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரச அதிகாரிகள், இதில் பல மூத்த அதிகாரிகளும் அடங்குவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில், இந்த வழக்குகளுக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளன. இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஊடக அறிக்கையைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீதான, ஆணைக்குழுவின் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை
17.3 மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தசநாயக்க விசாரணை ஆணையகத்தால் கைது செய்யப்பட்டார்.
2016 ஆம் ஆண்டு, அவர் ஊவா மாகாண முதலமைச்சராக இருந்தபோது, முதிர்ச்சி அடைவதற்கு முன்னர், ஒரு அரச வங்கியில் பராமரிக்கப்பட்டு வந்த ஊவா மாகாண சபையின் பல நிலையான வைப்பு கணக்குகளில் இருந்து 17.3 மில்லியன் ரூபாயை திரும்பப் பெற்றார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்த சம்பவம், தான் பிரதமராக இருந்த காலத்தில் நடந்ததாகவும், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒப்புதலுடன் திறைசேரி செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படியே, சாமர சம்பத் தசநாயக்க நிதியை திரும்பப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தனது அறிக்கை தொடர்பாக, ஏப்ரல் 17 ஆம் திகதியன்று வாக்குமூலம் அளிக்குமாறு கையூட்டலுக்கு எதிரான ஆணையகம், விக்ரமசிங்கவிடம் கோரியிருந்தது. எனினும், அந்த திகதியில், தாம் வருவது கடினம் என்று அவர் ஆணையகத்துக்கு அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |