புலம்பெயர் மக்களின் வெறுப்பான முடிவால் இக்கட்டான நிலையில் இலங்கை (Video)
புலம்பெயர் மக்கள் மத்தியில் இலங்கை அரசாங்கம் மீதான நம்பிக்கையீனம் மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாக இலங்கையில் தற்போது இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் நீடிக்கும் என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கலாநிதி கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் தற்போதைய நிலையானது, புலம்பெயர் மக்கள் இலங்கைக்கு தமது பணத்தை அனுப்பும் போது இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள், அதில் இருக்கக்கூடிய சிக்கல் என்பன இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இது மிக நீண்ட காலமாக இருக்கின்ற ஒரு பிரச்சினையாகும்.
அது மாத்திமின்றி புலம்பெயர் மக்கள் மத்தியில் இலங்கை அரசாங்கம் மீது இருக்கக்கூடிய வெறுப்பும் இந் நிலைமைக்கு மிக முக்கியமான ஒரு காரணமாக அமைத்துள்ளது.
நாட்டில் இரண்டு வகையான அந்நியச்செலாவணி வீதம் இருந்தது. மத்திய வங்கி கொடுத்தது 203, 193 என இரு வீதங்கள் இருந்தது.
ஒன்று ஒரு வங்கி ஒரு டொலரினை உங்களிடமிருந்து வாங்குவது 193 ரூபா, இன்னுமொருவர் அந்த டொலரை கேட்கிறார் எனில் அவருக்கு 203 ரூபாயாக இருந்தது. இது தான் அந்த மத்திய வங்கி நிர்ணயித்த நாணய வீதம்.
ஆனால் பொருளாதார நிலைமை மோசமடைந்து அந்நிய செலாவணிக்குத் தட்டுப்பாடு வந்தவுடன் வங்கிகள் இயங்கமுடியாத நிலைக்கு வந்தது.
அதாவது அந்நிய செலாவணி கையிருப்பு வங்கியிடம் குறைந்துவிட்டது. ஆகவே வங்கிகளிடம் ஏற்றுமதி, இறக்குமதி செய்கிறவர்கள் வங்கியுடன் தொடர்புபட்டபோது அவர்களுக்குக் கிடைத்த வீதம் குறைவடைந்தது.
அவர்களுக்கு அது போதாது இருந்தது. இந்த நிலையில் தான் ஒரு கள்ளச்சந்தை உருவானது. கள்ளச்சந்தை 250, 260 ரூபாய்க்குப் போய்க்கொண்டிருந்தது. உத்தியோக பூர்வ நாணய மாற்று வீதம் 203 ரூபாயாக இருந்தது.
அது தமிழர்கள் மட்டுமல்ல கட்டார் போன்ற மத்திய கிழக்கு நாடுகளிலிருந்த அனைவரும், தமிழர் சிங்களவர், முஸ்லிம் எனச் சகலரும் உண்டியல் ஊடாக தான் அனுப்பிக் கொண்டிருந்தனர்.
ஏனெனில் தங்களுடைய வீதம் போதாமலிருந்தது. இதனை தான் நிமல் சிறிபாத டி சில்வா அப்போதே சொல்லிக் கொண்டிருந்தார் ௨௪௦ ரூபா கொடுங்கள் என்று.
எல்லோருக்கும் அப்போதே அரசாங்கம் கொடுக்கும் வீதம் போதாது கள்ளச்சந்தையில் அந்நிய செலாவணிகள் வாங்கப்படுகின்றன, விற்கப்படுகின்றன என்பது விளங்கியது.
இன்றும் இந்தளவுக்குப் பெறுமதி குறைக்கப்பட்டு 270,260,275 வந்த பின்பும் நிலைமை வழமைக்குத் திரும்பவில்லை, இப்பொழுதும் ரூபாய்க்குக் கள்ளச்சந்தையில் ஒரு டொலரின் விலை 290, 295 ரூபாய்க்கு போவதாக நான் அறிகிறேன்.
ஆகவே இன்னும் அந்த உண்மையான நம்பிக்கை வரவில்லை. வெளிநாட்டு நீதியுடன் சம்பந்தப்பட்ட அனைவர்க்கும் உண்மையான நம்பிக்கை வரவில்லை. காரணம் பொருளாதாரத்திலுள்ள நிச்சயமற்ற தன்மை.
இந்த நிச்சயமற்ற தன்மை எப்போது முடிவுக்கு வருகிறதோ அப்போதே எல்லோரும் உத்தியோகப்பூர்வமாக அனுப்பத்தொடங்குவார்கள்.
அதுவரை இரண்டும் இடம்பெறும். சிலர் உத்தியோகப் பூர்வமாகவும் அனுப்புவார்கள். உயர்ந்த லாபம் பெற விரும்புவோர் கள்ளச்சந்தை ஊடகவும் அனுப்பிக்கொண்டிருப்பார்கள்.
உண்டியல் ஊடக அனுப்புவது சட்டவிரோதமானது. அது சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்பட்டது. அதாவது யாரவது அடையாளம் காணப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது மத்திய வங்கியின் சட்டங்களின் படி சட்டவிரோதமானது.
நம்பிக்கை வராத போது வெளிநாட்டிலிருப்பவர் தமது நண்பரூடாக உண்டியல் முறையில் தமது உறவினருக்குப் பணத்தை வைப்பு செய்யும் போது அதை இலங்கை அரசாங்கம் இலகுவில் கண்காணிக்க முடியாது. ஏனெனில் வந்த விடயம் எவருக்கும் தெரியாது.
ஆகவே நீண்ட காலம் இருக்கும் இந்த நிலைமை வழமைக்குத் திரும்பி ஒரு நம்பிக்கை வரும் வரைக்கும் சரிசெய்ய முடியாது சிலர் உத்தியோகவர்வமாக அனுப்புவதை விரும்பவில்லை, அதற்கு நேரமும் ஒரு காரணம். ஏனெனில் உத்தியோகப்பூர்வமாக அனுப்புவதை விட உண்டியல் உடைக்க அனுப்பும் போது குறுகிய காலத்தில் அனுப்பிவிடலாம்.
நாட்டில் புலம்பெயர் இலங்கையர்கள் கொண்டுள்ள வெறுப்பும் இதற்கு ஒரு காரணம். ஏனெனில் தாம் எதிர்பார்த்த விடயங்கள் எதிர்பார்த்த திசையில் போவதில்லை. ஆனால் அவசியத் தேவைக்கு அவர்கள் பணம் அனுப்பித்தான் தீரவேண்டும்.
இருந்தாலும் நாட்டில் ஒரு விதமான வெறுப்பு இருக்கத்தான் செய்கிறது, ஏனெனில் தாம் நினைத்த மாதிரி இந்த அரசாங்கம் செயற்படவில்லை. நினைத்த மாதிரி பொருளாதாரம் செல்லவில்லை, ஆகவே அந்த வெறுப்பு இருக்கிறது.
மேற்குறிப்பிட்ட விடயங்களில் புலம்பெயர்ந்த இலங்கையர்கள் வெறுப்பு நிலையைக் காட்டுவார்களாக இருந்தால் இலங்கை இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும் என்பதை யாராலும் தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.