மாகாணசபை தேர்தல் குறித்து அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்! - கந்தையா சர்வேஸ்வரன்
மாகாணசபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம் அவ்வப்போது மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருவது மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவதாகவும் இதனைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் உறுதியான முடிவெடுக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணைச் செயலாளருமான கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் (Kandaiya Sarveshwaran) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு-கிழக்கு மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முகமாகவே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாணசபை முறைமை ஏற்படத்தப்பட்டது.
எனினும் கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளும் வடக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளும் கடந்துள்ள போதிலும் இன்னமும் தேர்தல் பற்றிய தெளிவற்ற, குழப்பகரமான கருத்துகளை பல்வேறு அமைச்சர்கள் தினமும் தெரிவித்து வருகின்றனர்.
தற்போதைய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை, மாகாணசபை முறை ஒழிக்கப்படவேண்டும் என்பதே அவர்களது உள்ளார்ந்த விருப்பமாகும். 2009இல் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தலைமையிலான அரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்கள் மாகாணசபை முறையை ஒழிப்பது தொடர்பாக கருத்துகளைத் தெரிவித்தது மட்டுமன்றி, அவரது கட்சியைச் சேர்ந்த தென்னிலங்கையின் பல மாகாண சபைகள் தமக்கு மாகாண சபை முறை தேவையில்லை என்ற தீர்மானங்களையும் நிறைவேற்ற வைத்தார்.
எனினும், இந்தியாவின் தலையீட்டின் காரணமாகவே 2013இல் வடக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது. இன்றைய ஆட்சியில் முன்னாள் அமைச்சரும் தற்போது இந்தியாவிற்கான இலங்கைத் தூதருமான மிலிந்த மொறகொட (Milinda Moragoda) உட்பட பல ஆளும்கட்சி தலைவர்களும் சில பௌத்த பிக்குகளும் தொடர்ச்சியாக இதனை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இக்கருத்துகளுக்கு ஜனாதிபதியோ, பிரதமரோ, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர்களோ, கண்டனமோ, வருத்தமோ தெரிவிக்காததுடன் அமைதிகாத்தலானது இக்கருத்துகளை அங்கீகரிப்பதாகவே கொள்ள முடியும்.
மேலும், அரசாங்கம் புதிய அரசியல் யாப்பினை அறிமுகப்படுத்த முனைவதற்கு மாகாண சபையை ஒழிப்பது அல்லது அதிகாரம் எதுவுமற்ற ஒன்றாக மாற்றுவது தவிர, வேறு எந்த உருப்படியான காரணங்களையும் காணமுடியவில்லை.
முன்னைய அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுதல், உள்ளுராட்சி, மாகாண மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் முறைகளில் மாற்றம் செய்தல், மாகாணசபை முறை தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வுக்குப் போதுமானதாக அமையவில்லை என்ற வகையில் புதிய அரசியல் யாப்பிற்கு முயற்சி செய்தது.
இவ்வகையில், அரசியல் அமைப்பின் பத்தொன்பதாவது திருத்தத்தின் ஊடாக, ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஓரளவுக்குகக் குறைக்கவும் பட்டன.
அதே போன்று உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக எந்தவித ஏற்பாடுகளும் இன்றி, காலம் கடத்தப்பட்டு ஆட்சி முடிவடைந்தது.
இன்றைய அரசாங்கத்தைப் பொறுத்தவரை, பத்தொன்பதாவது திருத்தத்தின் ஊடாக குறைக்கப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் அனைத்தையும் 20ஆவது திருத்தத்தின் ஊடாக மீளப்பெற்றுவிட்டது.
தேர்தல் திருத்தங்களைப் பொறுத்தவரை, தேவைப்படும் மாற்றங்களை அரசியல் யாப்புத் திருத்தத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும். இதற்குப் புதிய யாப்பு தேவையில்லை.
எனவே புதிய யாப்பின் தேவை என்பது மேற்சொல்லப்பட்ட அவர்களது மாகாண சபையை இல்லாதொழிக்கின்ற அல்லது அர்த்தமற்றதாக்குகின்ற செயற்பாடுகளை மேற்கொள்ள மட்டுமே பயன்படும் என்ற முடிவுக்கே வரமுடியும்.
இருப்பினும், மீண்டும் இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவும் இந்தியாவின் ஆதரவு அரசாங்கத்திற்கு அவசியப்படுவதன் காரணமாகவும் இந்திய அரசதை திருப்திப்படுத்தவே அடுத்த ஆண்டில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படும் என்று ஓரிரு அமைச்சர்கள் கூறிவரும் அதேவேளை, பெரும்பாலான அமைச்சர்கள் அதனை நடத்த முடியாதென்பதற்கு நிதிநிலைமையையும், யாப்புத் திருத்தத்தையும் , காரணம் காட்டி தேர்தலை நடத்துவது தொடர்பில் அவநம்பிக்கையைப் பரப்பி வருகின்றனர்.
ஆட்சியாளர்கள் இந்த குழப்பகரமான நிலைப்பாடடிற்கு முற்றுப்புள்ளி வைத்து மாகாண சபை தேர்தல் தொடர்பில் உறுதியான முடிவை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
