விவசாய துறையில் பின்னடைவை சந்தித்த அரசாங்கத்தின் திட்டம்
விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து களஞ்சியப்படுத்தி, அதன் மூலம் அரிசி விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசாங்கத்தின் திட்டம் பின்னடைவை சந்தித்துள்ளது.
அரசு வங்கிகள் கடன் வசதிகளை வழங்க மறுத்ததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் நீல் அல்விஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் திட்டம்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“அரச வங்கிகளிடமிருந்து இரண்டு பில்லியன் கடன் பெறுவதற்கான நடவடிக்கை தோல்வியடைந்துள்ளது. இதனால் 30,000 மெட்ரிக் தொன்கள் கையிருப்பை சேகரிக்கும் மற்றும் அரிசியின் சந்தை விலையை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ நெல்லை 110 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய நெல் சந்தைப்படுத்தும் சபை திட்டமிட்டிருந்தது.
முன்னதாக, கடன் கோரப்பட்ட போது அரச வங்கிகள் 250 மில்லியன் ரூபாவை மாத்திரமே விடுவித்திருந்தன.
இதன் மூலம்,நெல் சந்தைப்படுத்தும் சபையினால் 7000 மெட்ரிக் தொன் நெல்லை மட்டுமே கொள்வனவு செய்ய முடிந்தது.”என கூறியுள்ளார்.
நெல் கொள்வனவு
எனினும் விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஷ்பகுமாரவின் தகவல்படி, அரசாங்கம் தலையிட்டு விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
இந்தநிலையில் குறைந்த பட்சம் 20,000 மெட்ரிக் தொன் நெல்லை கொள்முதல் செய்யாவிட்டால், அரிசி விலையை கட்டுப்படுத்துவது கடினம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.