அநுரவின் ராஜதந்திர நடவடிக்கையில் சிக்கப் போகும் பசில்
முன்னாள் அமைச்சர் பசில் ராபக்சவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நீல அறிவிப்பு விடுக்கப்பட்ட பசில் நாட்டிற்கு அழைத்து வரப்படுவாரா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இராஜதந்திர நடைமுறைகள்
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சட்டம் உள்ளது. சில நாடுகளுக்கு இராஜதந்திர நடைமுறைகள் உள்ளது. அந்த நாடுகளின் இராஜாங்க நடவடிக்கைகளுக்குட்பட்டு நாங்கள் செயற்பட வேண்டும்.

ஒருவரை அழைத்து வரும் போது சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கென தனியான சட்டம் உள்ளது. அதனால் அதற்கு இணங்கி செயற்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்திய அனைத்து குற்றவாளிகளையும் அழைத்து வர வேண்டும். அவர்களை சட்டத்திற்கு முன்பாக நிறுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.
யாருக்கும் விசேட சலுகைகள் கிடையாது. அர்ஜுன் மகேந்திரன், பசில் போன்றவர்களை அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் மேலும் பலர் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதென ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறித்து தாங்கள் அறிவீர்களா என ஊடகவியலாளர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அது குறித்து அறிந்திருக்கவில்லை. எதிர்காலத்தில் பார்ப்போம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.