எரிசக்தி சவாலை முறியடிப்பதே அரசின் இலக்கு! எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி சவால்களை முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதே அரசின் முதன்மை நோக்கம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாட்டின் வலுசக்தி பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தொடர்வது குறித்த அவசரக் கலந்துரையாடல் நேற்று(16) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒரு நாள் விடுமுறை
இதில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போதைய சூழ்நிலையில் அரச சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பது குறித்துப் பல முக்கிய ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அரச ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவதன் ஊடாக எரிசக்தி நுகர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.அத்தியாவசியமற்ற பிரிவுகளில் வீட்டிலிருந்து பணியாற்றுவதன் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது.
அதிகாரிகளைப் பணிக்கு அழைப்பது குறித்த தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அந்தந்த நிறுவனத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
கல்வி, சுகாதாரம், சுற்றுலா, மீன்பிடி, கைத்தொழில், விவசாயம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்ற துறைகளில் குறைந்தபட்ச எரிசக்தி நுகர்வை உறுதிப்படுத்தி, சேவைகளை முன்னெடுக்கும் மாற்றுவழிகள் குறித்து ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
எரிபொருள் நுகர்வு
இத்துறைசார் நிபுணர்களிடம் இருந்து இது குறித்த விசேட அறிக்கையையும் அவர் கோரியுள்ளார்.
தினசரி எரிபொருள் நுகர்வை முறையாக முகாமைத்துவம் செய்வதே கியூ.ஆர். முறைமையை அறிமுகப்படுத்துவதன் நோக்கம் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை மேலும் முறைப்படுத்துவதற்குப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சு இணைந்து செயற்படப் பரிந்துரைக்கப்பட்டது.

தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு அரச வைபவங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டது. எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு மானிய முறைகள் மூலம் வசதிகளை வழங்கவும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.
அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்துத் தனியார் துறைக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அமைச்சர்களான விஜித ஹேரத், வசந்த சமரசிங்க, வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, சுனில் ஹந்துன்னெத்தி, பிமல் ரத்நாயக்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam