ரணில் திருடர்களை வைத்து ஆட்சி செய்ய முயற்சிக்கிறார்! பகிரங்க குற்றச்சாட்டு (Video)
”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திருடர்களை வைத்து ஆட்சி செய்ய முயற்சிக்கிறார்” என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் நாலக கொடஹேவா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் தற்போது நடைபெறும் லஞ்ச ஊழல் நடவடிக்கைகளுக்கு தீர்வு காணாது நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்ய முடியாதெனவும் அதனை கட்டியெழுப்ப முடியாது எனவும் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் எந்தவொரு திட்டமும் இல்லை. நாட்டின் பொருளாதார சூழ்நிலையை ஸ்ரீலங்கா அரசாங்கம் இதுவரை புரிந்துகொள்ளவில்லை.
இலங்கையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் நாட்டின் பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறாரகள். இவ்வாறானவர்களுக்கு உதவி செய்யாமல் நாட்டின் பொருளாதாரத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது.
இலங்கையின் பொருளாதார நிலை குறித்த போதுமான அறிவு அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு இல்லை. சர்வதேச உதவிகளுக்கு தம்மை கட்டுப்படுத்திக் கொள்ளாமல், ஸ்ரீலங்கா அரசாங்கம் நாட்டு வருமானத்தை அதிகரித்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு உதவ ஸ்ரீலங்கா அரசாங்கம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தாமதப்படுவதுக்கு மக்கள் ஆணையில்லாத இலங்கை அரசாங்கமே காரணம்” என்றார்.



