இலங்கை அரசாங்கத்தை பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்றும் திட்டம்!
இலங்கை ஒற்றையாட்சிக்குள் ஈழத் தமிழர்களையும் இணங்கி வாழவைக்கும் அமெரிக்க - இந்திய நகர்வுகளின் மற்றுமொரு கட்டமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடந்த வாரம் தமிழகத்துக்குச் சென்று வந்திருக்கிறார்.
ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கடந்த வாரம் தமிழகம் சென்று வந்தாலும், நிகழ்ச்சி நிரல் ஒன்றுதான். அதாவது அறிவுறுத்தும் அரசியலுக்கு (Instruction politics) உட்பட்டதே.
இந்தியாவுடன் சேர்ந்து பயணிக்க வேண்டுமெனச் சுமந்திரன் தலைமையிலான குழுவுக்கு அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் அறிவுறுத்தப்பட்டது போன்று, 13 ஐ அடிப்படையாகக் கொண்டு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென்ற பரிந்துரை இலங்கையின் இணக்கத்துடன் செல்வம் அணிக்கும் வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு அறிவுறுத்தலுக்கு உட்பட்ட அரசியல் பின்னணியிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகள் கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பியிருந்தன. அதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திப்பதற்கான ஏற்பாடு செவ்வாய்க்கிழமை முன்மொழியப்பட்டிருந்து.
ஆனாலும் தவிர்க்க முடியாதவொரு சூழலில், அந்தச் சந்திப்பும் பிற்போடப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்புக்கு ரெலோ, ஈபிஆர்எல்எப் போன்ற கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தாலும், அமெரிக்க- இந்திய நிகழ்ச்சி நிரலின் பின்னணியில், அந்தச் சந்திப்பில் அவர்கள் நிச்சியமாகக் கலந்துகொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும்.
எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கோட்டாபய ராஜபக்சவுடன் அல்லது பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் நடைபெறவுள்ள சந்திப்பில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் கைச்சாத்திட்ட அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும் நிச்சயம் சந்திக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
குறிப்பாகக் கடந்த வாரம் தமிழகத்தில் வைத்துச் செல்வம் அடைக்கலநாதனுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் நிதியமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன்னரே பசில் ராஜபக்ச கடந்த ஆண்டு யூன் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, இந்த நகர்வுகளுக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
சுமந்திரன் உள்ளிட்ட சில புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளோடும் உரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. அமெரிக்க- இந்திய நிகழ்ச்சிக்கு அமைவாக அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சிகள் அரங்கேறியுள்ள நிலையிலேயே, தற்போது இலங்கை எதிர்நோக்கியிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்தும் மீட்பதற்கான முயற்சிகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் ஈடுபட்டுமுள்ளனர்.
இதன் காரணமாகவே கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்புக்குரிய ஏற்பாட்டையும், சுமந்திரன் தமிழ் நாட்டுக்குச் சென்று வந்ததன் பின்னணியையும் நோக்க வேண்டும். குறிப்பாகத் தமிழக நிதியமைச்சரைச் சுமந்திரன் சந்தித்து வடக்கு, கிழக்கில் தமிழக அரசின் முதலீடுகளுக்கு அழைப்பு விடுத்தமை போன்றவற்றை அவதானிக்க வேண்டும்.
இருந்தாலும், இதன் செயற்பாடுகளில் உள்ள பின்புலங்களைக் கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் மு,க.ஸ்ராலின் சுமந்திரன் உள்ளிட்ட குழுவைச் சந்திப்பதைத் தவிர்த்திருக்கிறார் போலும். ஆனாலும் கேரளா முதலமைச்சரைச் சுமந்திரன் சந்தித்ததன் பின்னணியில் ஸ்ராலினும் எதிர்காலத்தில் சுமந்திரனைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உண்டெனலாம்.
ஆகவே இந்தியாவுடன் இணைந்து பயணிக்க வேண்டுமென்ற அமெரிக்க அறிவுறுத்தல் அரசியலின் அடிப்படையில் செயற்பட்டு வரும் சுமந்திரன், இலங்கையைத் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான வேலைத் திட்டங்களையே முன்னெடுக்கின்றார் என்பது கண்கூடு.
இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமெனக் கோரி வடக்கு, கிழக்கு மற்றும் இலங்கைத்தீவின் அனைத்துப் பிரதேசங்களிலும் நடத்தப்பட்ட கையொப்பமிடும் போராட்டம், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தை இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கான போராட்டமாகக் காண்பிக்கும் முயற்சி என்பதும் பகிரங்கமாகியுள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் இந்தப் போராட்டத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லையெனக் கூறமுடியாது. ஏனெனில் தமிழரசுக் கட்சியை மையப்படுத்தியதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.
அத்துடன் மோடிக்குக் கடிதம் அனுப்பும் விவகாரத்திலும் ஆரம்பத்தில் முரண்பாடுகள் இருந்தாலும், இறுதியில் இணங்கிக் கொண்டதுபோன்றே, பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகக் கையொப்பமிடும் போராட்டத்தின் பெறுபேறுகளையும் பின்னாளில் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகும்.
அல்லது தமிழ்த்தேசியக் கட்சித் தலைவர்கள் தங்கள் தங்கள் கட்சிகளுக்கு அறிவிக்காமலேயே கையொப்பமிடும் போராட்டத்தையும் அதன் நீட்சியாகச் சுமந்திரன் மேற்கொள்ளும் நகர்வுகளையும் ஆதரிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படலாம். சுமந்திரனின் கடந்தவாரத் தமிழகப் பயணம் தொடர்பாகவும் அங்கு நடத்தப்பட்ட சந்திப்புகள் பற்றியும் செல்வம் அடைக்கலநாதன் அறிந்திருக்க வாய்ப்புண்டு.
அத்துடன் வேறொரு கோணத்தில் இலங்கையைத் திருப்திப்படுத்தக்கூடிய நகர்வுகளுக்குக் கடந்தவாரம் தமிழகத்தில் வைத்துச் செல்வம் அடைக்கலநாதன் பயன்படுத்தப்படுகின்றார் என்பதைச் சுமந்திரனும் அறிந்திருப்பார்.
ஆகவே தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிலரும், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் இயக்கமும் சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் நகர்வுகளைத் தெரியாதெனக் கூற முடியாது.
அதற்கு இவர்கள் அனைவரும் கட்டுப்பட்டே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. அதேபோன்று தமிழரசுக் கட்சியில் சுமந்திரனின் நகர்வுகளைக் குற்றம் சுமத்தி விமர்சிக்கும் ஏனைய சில உறுப்பினர்களும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் இந்த முன்னெடுப்புகளின் பின்னால் செல்ல வேண்டிய கட்டாயச் சூழல் உருவாக்கும் என்பதும் பட்டறிவு.
ஆகவே இலங்கைக்குச் சாதகமான அமெரிக்க- இந்திய நகர்வுகளைத் தமிழர்களுக்குரியதாக மாற்றியமைக்கக்கூடிய அல்லது இந்தியாவைக் கையாளக்கூடிய ஆற்றல் உள்ள தமிழ்ப் பிரதிநிதிகள் உருவாக்க வேண்டும். அமெரிக்க- இந்திய அறிவுறுத்தல் அரசியல் செயற்பாடுகளுக்குள் முடங்கியுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளைக் கடந்து பொது அமைப்புகள், இது பற்றிய விழிப்ணபர்வுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முன்வர வேண்டும்.
இல்லையேல் 2009 இன் பின்னரான கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் ஏமாற்றப்பட்டதைவிட மிகவும் ஆபத்தான அரசியல் பின்னணிக்குள் ஈழத்தமிழர்கள் சென்றுவிடக்கூடிய ஏதுநிலையே உருவாகலாம். கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்க- இந்திய அரசுகளினால் ஏமாற்றப்பட்டு விட்டதாகச் சம்பந்தன் கூட 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது தனது மனசாட்சியைத் திறந்து பகிரங்கமாகக் கூறியிருந்தார்.
ஆகவே சுமந்திரனை விமர்சித்துக் குற்றம் சுமத்தும் தமிழரசுக் கட்சியின் ஏனைய சில உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் வேறு சில உறுப்பினர்களும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த முடியும். ஆனால் அவர்களும் வேறொரு பாதையில், ஆனால் இதே கோணத்தில் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்தால், கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் சிங்கள கட்சிகளின் முகவர்களுக்கே அது சாதகமாக அமையும்.
எனவே இப்படித்தான் செய்யுங்கள் என்று அமெரிக்க- இந்திய அரசுகளினால் அறிவுறுத்தப்படுகின்ற அரசியல் (Instruction politics) முன்னெடுப்பை விலக்கி, சுயமரியாதையுடன் கூடிய தமிழ்த்தேசிய அரசியலை நகர்த்திச் செல்ல சிவில் சமூக அமைப்புகள் மேலெழ வேண்டும் என்ற காலகட்டத்தை தற்போதைய நகர்வுகள் கோடி காட்டுகின்றன.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 8 மணி நேரம் முன்

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? News Lankasri
