ரஷ்ய சட்ட மா அதிபர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்குச் செல்ல அரசாங்கம் தடை விதிக்கவில்லை! நீதி அமைச்சர்
ரஷ்யக் கூட்டமைப்பின் சட்ட மா அதிபர் அலெக்சாண்டர் குட்சான் இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்வதை அரசாங்கம் தடுத்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், அவ்வாறான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.
பாதுகாப்பு நிலைமை
தமக்குக் கிடைத்த தகவல்களின்படி, பாதுகாப்பு நிலைமையை மதிப்பீடு செய்த பின்னர், குறித்த இரண்டு நிறுவனங்களுக்கும் விஜயம் செய்வதைத் தவிர்ப்பதற்கான தீர்மானத்தை ரஷ்ய சட்ட மா அதிபரின் சொந்த பாதுகாப்புப் பிரிவினரே சுயமாக எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்ரல் பெர்னாண்டோ, ரஷ்ய சட்ட மா அதிபருக்கு குறித்த நிறுவனங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.