மாகாண சபைத் தேர்தலை அரசு ஒருபோதும் நடத்தாது! ராஜிதவின் உறுதி
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபைத் தேர்தலை ஒருபோதும் நடத்தாது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், அரசின் வாக்கு வங்கி மேலும் வீழ்ச்சியடையும்.

தோல்வி எனத் தெரிந்தே தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆளுங்கட்சி தயாராக இல்லை. இதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமா என்பது பெரும் சந்தேகமாக உள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவினால் தேர்தலை நடத்துவது குறித்து அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு அரசிடம் இருந்து இதுவரை எவ்விதப் பதிலும் இல்லை.
நீண்டகாலமாக ஆளுநர்களின் ஆட்சி
தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதிலும் அரசு எவ்வித முனைப்பையும் காட்டவில்லை இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்பதையே வெளிப்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாக ஆளுநர்களின் ஆட்சியின் கீழ் முடங்கிக் கிடக்கும் மாகாண சபைகளுக்குத் தேர்தலை நடத்தி, மக்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது.
எனினும், முன்னாள் அமைச்சர் ராஜிதவின் இந்தக் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.