பெரும்பான்மையை இழக்கின்றது அரசாங்கம்: விரைவில் பலர் எதிரணிப் பக்கம் தாவுவதாக தகவல்
அரசாங்கத்தில் இருந்து பலர் விரைவில் எதிர்க்கட்சிக்கு வரப்போகின்றார்கள் என்பதுதான் உண்மை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
உங்கள் கட்சியில் இருந்து பலர் ரணிலுடன் சேர்ந்துவிட்டனர், இன்னும் பலர் இணைவதற்குத் தயாராக உள்ளனர் என்று சொல்லப்படுகின்றதே என தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்துடன் எமது கட்சியைச் சேர்ந்த சிலர் இணைந்துள்ளனர். அது சரியான முடிவல்ல.
அங்கிருந்து 50 பேர் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளார்கள். எங்களது நால்வர் அரசாங்கம் பக்கம் சென்றுள்ளார்கள். அப்படிப் பார்க்கும்போது அரசாங்கம் தான் வீழ்ச்சியடைந்திருக்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குக் கஷ்டப்படுவார்.
எமது கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைவதை விட அரசாங்கத்தில் இருந்து பலர்
விரைவில் எதிர்க்கட்சிக்கு வரப்போகின்றார்கள் என்பதுதான் உண்மை.
ஆனால், இது பற்றியோ அல்லது எதிர்க்கட்சிக்கு ஏற்கனவே வந்துள்ள 50 பேர் பற்றியோ பேசுவதில்லை. எமது கட்சியில் இருந்து அரசாங்கம் பக்கம் சென்ற நால்வர் பற்றியே பேசப்படுகின்றது.
கொள்கை அடிப்படை அரசியல்
எனக்கும் அரசாங்கத்திடம் இருந்து அழைப்பு வந்தது. எனது தந்தைக்கும் ரணிலுக்கும் இடையில் நீண்ட உறவு இருந்தது. அப்படியென்றால் நான்தான் முதலில் போய் அரசாங்கத்துடன் இணைந்திருக்க வேண்டும்.
நான் தனிப்பட்ட உறவைப் பார்த்து அரசியல் செய்யவில்லை. கொள்கை அடிப்படையில் அரசியல் செய்கின்றேன்.
அதனால் தான் நாம் ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியை உருவாக்கினோம். ரணிலுக்கும் எமக்கும் இடையில் தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும் என்பதை மக்கள் கூறினார்கள். அதனால்தான் நாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகினோம்.
ரணில் அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பதவியை சஜித்துக்கு வழங்கி இருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி அப்போதே ஆட்சியைப் பிடித்திருக்கும். தனிப்பட்ட முறையில் ரணிலுக்கான மரியாதை - நட்பு எல்லாம் உள்ளது. அதில் எந்தப் பிரச்சினை இல்லை என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |