அரசு மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக தற்போதைய எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களினால் கடந்த அரசாங்கத்தினால் மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தற்போது வரை முழுமை அடையாத நிலையில் காணப்படுகின்றது. பல்வேறு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு மக்கள் பயன் அடைந்து வருகின்ற போதும் இறுதி நேரத்தில் மன்னார் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்பட்ட போதும் தற்போதுவரை முழுமையடையவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களைக் குறித்த வீட்டுத்திட்ட பயனாளிகளாகத் தெரிவு செய்வது வழமை.
அவ்வாறு தெரிவு செய்யப்பட்டு வீட்டுத் திட்டங்களுக்கென சுமார் 2 இலட்சம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்று வரை மேலதிக கொடுப்பனவுகள் எவையும் வழங்கப்படாமல் பல்வேறு கஷ்டங்களுக்கு வடக்கு கிழக்கில் மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.அவர்கள் கடனை பெற்றுக் கொண்டு தற்போது கடனாளியாக உள்ளனர்.
பல்வேறு உடைமைகளை அடகு வைத்து தற்போது அதனை மீட்டுக் கொள்ள முடியாத நிலையில் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது குறித்த வீடுகளை முழுமையாகக் கட்டி முடிக்க முடியாத நிலையில் உள்ளனர்.-இவ்விடையம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் வாய் திறக்க மாட்டேன் எனச் சொல்லுகின்றார்.
நாங்கள் இந்த அரசாங்கத்திடம் கேள்விகளைக் கேட்டுள்ளோம். அரசாங்கம் குறித்த வீட்டுத்திட்டத்தை முழுமையாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகத் தெரிவித்தும் இன்று வரை குறித்த வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அரசாங்கத்திற்குள் உள்ள ஒருதிணைக்களம். எனவே தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கடந்த அரசாங்கத்தின் போது குறித்த வீட்டுத்திட்டங்களை வழங்கி விட்டார் என்பதற்காக இந்த அரசாங்கம் சாமானிய மக்களைப் பழிவாங்கக்கூடாது.
இந்த விடையத்தில் அரசாங்கம் சரியான ஒரு தீர்வை மாத இறுதிக்குள் வழங்கி மக்களுக்குக் கொடுக்க வேண்டிய மிகுதி கொடுப்பனவை வழங்கத் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இணைத்து வடக்கு கிழக்கில் போராட்டத்தை முன்னெடுக்கின்ற நிலை ஏற்படும். எனவே இந்த மாதத்தினுள் அரசு உரிய பதிலைக் கூறவேண்டும். பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்க உள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தும் பேச இருக்கின்றோம். அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தக்கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த அரசு மக்களின் பிரச்சினைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மாகாண சபை தேர்தல் மற்றும் டெலோ கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.