மீண்டும் இருண்ட யுகத்துக்குள்அழைத்துச் செல்ல அரசு முயற்சி! - வேலுகுமார் எம்.பி
"லயன் என்ற கட்டமைப்புக்குள்தான் பெருந்தோட்ட மக்கள் வாழ வேண்டும். அவர்கள் வாழும் பகுதிக்கு கிராமம் என்ற அங்கீகாரத்தை வழங்கக்கூடாது என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.
அதற்கேற்ற வகையிலேயே புதிய அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் அது எமது மக்களை மீண்டும் இருண்ட யுகத்துக்கே அழைத்துச்செல்லும்." இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிதிச்செயலாளருமான வேலு குமார் தெரிவித்தார்.
கட்சிச் செயற்பாட்டாளர்கள் சிலருடன் கண்டி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "தோட்ட வீடமைப்பு முறைமையைத் திருத்தம் செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தப் பத்திரத்தில் நயவஞ்சகமான ஏற்பாடுகள் இருந்தாலும், அது பற்றி கதைக்காமல், 10 பேர்ச்சஸ் காணி என்ற ஒன்றை மட்டும் தூக்கிப்பிடித்து, ஆளுங்கட்சிக்கு காவடி தூக்கும் நடவடிக்கையில் அரச பங்காளிகளும், அவர்களின் அடியாட்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் எமது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. எமது ஆட்சியில் லயன் யுகத்துக்கு முடிவு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாதுகாப்பான இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வீடுகள் அமைக்கப்பட்டன. தோட்டங்கள் கிராமங்களாக பரிணாமம் பெற்றன. அதுமட்டுமல்ல வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட காணிக்கு அப்பால் தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் வீதம் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.
எனவே, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை விடுத்து, மாற்றம் என்ற போர்வையில் எமது மக்களை அதே லயன் யுகத்துக்குள் வைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள லயன்கள் இடிக்கப்பட்டு அங்குதான் வீடுகள் அமைக்கப்பட வேண்டும். ஒரு லயன் அறை கட்டுவதற்கு ஒரு பேர்ச்சஸ் காணிகூட இல்லை. எனவே, லயன்களை இடித்துக்கட்டினால் எப்படி 10 பேர்ச்சஸ் என்பது எல்லோருக்கும் சாத்தியமாகும்? அதேபோல் லயன் என்ற கட்டமைப்புக்குள் இடைவெளியின்மை, வீதி வசதி இன்மை என பல பிரச்சினைகள் இருந்தன.
ஆக தனி வீடுகள் அமைக்கப்பட்டாலும் அதே பிரச்சினைகள் தொடரும் வகையில்தான் திட்டம் அமைந்துள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சுயதொழிலை ஊக்குவிப்பதற்கும், அவர்களைச் சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கும் தலா 2 ஏக்கர் வீதம் வழங்குவதற்கு ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. தற்போது அதுவும் இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீடு கட்டுவதற்கு 7 பேர்ச்சஸ் காணி, எஞ்சிய 3 பேர்ச்சஸ் காணியில் சுயதொழில் என அறிவித்துள்ளதன் மூலம் குறுகிய வட்டத்துக்குள் மக்களை சிறை வைப்பதற்கு வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த நயவஞ்சகத் திட்டம் தெரியாமல், ஏதோ வரலாற்றை மாற்றியமைத்து விட்டது போல் சிலர் வீறாப்புப் பேசுகின்றனர்.
இருந்ததும், இல்லாமல்போகப்படுகின்றது என்பதே கசப்பான உண்மையாகும். எனவே, எமது மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் தொடர்ந்தும் குரல் கொடுப்போம்" - என்றார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan