அரசாங்கத்தின் வருமானம் குறித்து நிதி அமைச்சு வெளியிட்ட தகவல்
இந்த ஆண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில், மொத்த அரச வருமானம் 27.1 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக நிதி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
அரச வருமானம் மற்றும் கொடைகள் 2956.0 பில்லியன் ரூபாவாக அதிகரித்து, மானியங்கள் நீங்கலாக, மொத்த அரச வருமானம் வருடாந்த மதிப்பீட்டில் 56.1 சதவீதத்தை எட்டியுள்ளது.
அதன்படி, மானியங்கள் நீங்கலாக, மொத்த அரச வருமானம் 2954.2 பில்லியன் ரூபாவாக அதிகரித்து, 27.2 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வலுவான வருவாய் செயல்முறைக்கு முக்கிய காரணம் வரி வருவாய் அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வருமான வரி, பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி, மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் மீதான வரிகள் காரணமாக மொத்த வரி வருமானம் 2710.6 பில்லியன் ரூபாவாக அதிகரித்து, 25.9 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக நிதி அமைச்சின் அண்மைய இடைக்கால நிதியறிக்கை தெரிவிக்கிறது.
இறக்குமதி சார்ந்த வரிகள் மற்றும் உள்நாட்டு வரிகள் ஆகிய இரு பகுதிகளிலும் வரி சேகரிப்பு அதிகரிப்பைக் காட்டி, வரி வருவாயை அதிகரிப்பதற்கு இலங்கை சுங்கம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முக்கிய பங்காற்றியுள்ளன.
வரி அல்லாத வருவாயும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து, 243.6 பில்லியன் ரூபாவாக, 43.6 சதவீத வளர்ச்சியை அடைந்திருப்பதாக அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.