அனர்த்த உயிரிழப்பின் உண்மைத் தன்மையை மறைக்கின்றது அரசு! சுமந்திரன் பகிரங்கக் குற்றச்சாட்டு
"இலங்கையில் அனர்த்தத்தால் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கக்கூடாது" என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
"அரசாங்கத்துக்கு எதிராகப் பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்கக்கூடாது. உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப் பணிகளும் சரியான முறையில் நடைபெறும்." என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட மக்கள்
"ஆழிப் பேரலை வந்தபோது அன்றைய அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து ஏற்படுத்திய கட்டமைப்பைத் தடுக்க நீதிமன்றப் படியேறிய ஜே.வி.பியினருடன் கூட இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றோம் என்றால் வேறு யாருடன் சேர்ந்து செயற்பட மாட்டோமா? எல்லோருடனும் சேர்ந்து செயற்படுவோம்." - என்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பகுதியில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் 'இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு' ஊடாக இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன் முதல் கட்டமாக களுவாஞ்சிக்குடிப் பகுதியில் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட சுமார் 1000 பேருக்கான நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் தலைமையில் களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.
முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிவாரண வேலைத்திட்டம் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
பரிதாபகரமான சம்பங்கள்
இதன்போது கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், "மலையகத்துக்கு நாம் விஜயம் செய்த போது பல பரிதாபகரமான சம்பங்கள் தொடர்பில் அறிந்துகொண்டோம். சில இடங்களில் முழுக் கிராமங்களுமே புதையுண்ட நிலையில் காணப்படுகின்றன.

அந்த நேரத்தில் வீடுகளில் இல்லாத சிலர் தப்பிப் பிழைத்துள்ளனர். அங்கிருந்த ஒருவர் தனது முழுக் குடும்பமுமே புதையுண்டுள்ளது எனவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு யாரும் வரவில்லை எனவும், மூன்று நாட்களாக எப்படியாவது தமது குடும்பத்தினரின் உடல்களை மீட்க வேண்டும் எனப் போராடி வருவதாகவும் தெரிவித்தார்.
அங்கு சிலர் தமது பணத்தைக் கொடுத்து இயந்திரங்களை எடுத்துத் தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நிவாரணப் பணிகளில் அனைவரும் கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அரசாங்கமும் சொல்கின்றது. நாங்களும் கூறுகின்றோம். அனைவரும் கூறுகின்றார்கள்.
ஆனால், இந்த விடயங்களில் ஏனைய கட்சிகளைப் புறந்தள்ளிவைப்பதில் அரசாங்கம் மும்முரமாகச் செயற்படுவது வெளிப்படையாகத் தெரிகின்றது. நேற்று கண்டி மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்தபோது கம்பளைப் பகுதியில் 19 பேர் தான் உயிரிழந்துள்ளனர் என்று சொல்கின்றார். நாங்கள் சென்ற முதல் இடத்திலேயே 26 உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.
இன்னும் 50 இற்கும் மேற்பட்டவர்கள் புதையுண்டுள்ளனர் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு பல கிராமங்கள் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளன. அந்தப் பகுதிகளில் மக்கள் சென்று மீள வாழ முடியாத வகையில் அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.
நேற்று நாங்கள் சென்ற பதுளை மாவட்டம், நுவரேலியா மாவட்டங்களில் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளமையைக் காணமுடிகின்றது. அங்குள்ள மக்கள் எங்களைக் கண்டதும் கண்ணீருடன் தமது துயரங்களை - கஷ்டங்களைக் கூறினார்கள். அந்தப் பகுதிகளில் உடனடி நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்படாததை மக்கள் மூலம் அறியமுடிந்தது.
நிவாரணப் பணிகள்
இதனை நாங்கள் குறைகூற வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. அரசாங்கத்தைக் குறைகூறுவதற்காக இதனைச் சொல்லவில்லை. மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் சென்றடைய வேண்டும். மக்களின் உயிரிழப்புகள் எத்தனை என்பது தெளிவாகத் தெரிய வேண்டும். உண்மையை - முழுப்பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்க முடியாது.

நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கின்றபோது முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு பத்து பதினைந்து பேர்தான் உயிரிழந்துள்ளார்கள் என அரசாங்கம் பதில் சொன்னால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தவேளையில் அரசாங்கத்துக்கு எதிராகப் பேசக் கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்கக் கூடாது. உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப் பணிகளும் சரியான முறையில் நடைபெறும்.
ஆழிப் பேரலை வந்தபோது அன்றைய அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து ஏற்படுத்திய கட்டமைப்பைத் தடுக்க நீதிமன்றப் படியேறிய ஜே.வி.பியினருடன் கூட இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றோம் என்றால் வேறு யாருடன் சேர்ந்து செயற்பட மாட்டோமா? எல்லோருடனும் சேர்ந்து செயற்படுவோம்" - என குறிப்பிட்டுள்ளார்.