சட்டவிரோத தொழில்களுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கும் அரசாங்கம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு
ஊழலை ஒழிக்கவந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழில்களுக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதாக கடற்றொழிலாளர் இயக்கத்தின் யாழ். மாவட்ட தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தனது இல்லத்தில் இன்று(6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 03.04.2025 அன்று வடமராட்சி கிழக்கில் இருந்து தேசிய மக்கள் சக்தியினர் தமக்கு ஆதரவானவர்களை அழைத்து சென்று யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களத்தில் சட்டவிரோத தொழில் முறைகளுக்கு அனுமதி பெற்றுக் கொடுத்ததாக மக்கள் சிலர் என்னிடம் முறைப்பாடளித்துள்ளனர்.
சட்டவிரோத தொழில்கள்
இதனுடைய உண்மைத் தன்மை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி கிழக்கு இணைப்பாளர் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
சில நபர்களுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டதாகவும் அவர்களில் ஒரு சிலர் சட்டவிரோதமாக தொழில் புரிவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஊழலை ஒழிப்போமென கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குகளை பெறுவதற்காக சட்டவிரோத தொழில்களை செய்யுங்கள் என்று மக்களிடம் கூறுகிறார்கள். அவர்களை கைது செய்யாது ஊக்குவிக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |