மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுக! அரசிடம் மனோ வலியுறுத்து
கடந்த காலங்களில் மலையக அரசியல் பிரதிநிதிகள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்ற நிலைப்பாட்டைத் தோற்றுவிக்க இந்த அரசு முயற்சிக்கின்றது. அது முற்றிலும் தவறானது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(09.09.2026) நடைபெற்ற அமர்வில் பிரதமருடனான கேள்வி வேளையின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ள வீடுகள்
மேலும் உரையாற்றுகையில், "தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ளது.
இந்த நாட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள எமது மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் கேள்விகளை முன்வைக்கின்றேன்.

கடந்த அரசுகளால் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுப்படுத்தாத வீடுகள் இந்தக் காலப்பகுதிக்குள் முழுமையாக புனரமைக்கப்பட்டு,பயனாளர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் அதன் எண்ணிக்கை எத்தனை? அரசால் காணிகள் வழங்கப்பட்டு, நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை எத்தனை?
தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணி ஒதுக்கீட்டு பயனாளிகளின் எண்ணிக்கை எத்தனை ?
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர்
டித்வா புயல் தாக்கத்தைத் தொடர்ந்து மலையகத்தில் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தை அமைக்க அரசு அனுமதியளித்துள்ளதா? 2025 ஆம் ஆண்டுக்குள் 6 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதாகப் பெருந்தோட்டத்துறை அமைச்சர் கடந்த ஆண்டு குறிப்பிட்டார்.
ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை.

கடந்த காலங்களில் மலையக அரசியல் பிரதிநிதிகள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்ற நிலைப்பாட்டைத் தோற்றுவிக்க இந்த அரசு முயற்சிக்கின்றது. அது முற்றிலும் தவறானது.
கடந்த காலங்களில் இந்திய அரசுடன் கலந்துரையாடி 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்துக்கான நிதி ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளோம். காணி டெல்லியில் இருந்து வராது. இங்குதான் காணியை வழங்க வேண்டும்.
பெருந்தோட்ட மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டாம். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுங்கள். அதனை விடுத்து கடந்த காலத்தை விமர்சித்துக் கொண்டிருக்காதீர்கள் என்று அரசிடம் கேட்டுக்கொள்கின்றேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டில் பல கோடி தங்க நகைகளுடன் சொகுசு வாழ்க்கை! அறிவிப்பின்றி அவசரமாக நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர்