வைத்தியர் சுகுணன் தொடர்ந்த வழக்கு! அர்ச்சுனா உள்ளிட்ட 6 பேருக்கும் நீதிமன்றம் உத்தரவு
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறான பதிவுகளை வெளியிட்டதாகக் கூறி, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை (02) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அ.தர்ஷினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்றில் முன்னிலை
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட ஆறு பேரும் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
வைத்தியர் சுகுணனுக்கு எதிராக முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவதூறான பதிவுகளை வெளியிட்டதாகக் கூறி, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி குறித்த ஆறு பேரும் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவதற்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இன்றைய விசாரணையின்போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சார்பில் சட்டத்தரணி கௌசல்யாவும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உள்ளிட்ட ஏனைய எதிராளிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கியாஸ் ஹிஸ்புல்லா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவும் முன்னிலையாகினர்.
இராமநாதன் அர்ச்சுனா
இதன்போது, சில எதிராளிகள் தமது தரப்பு விளக்கங்களை முன்வைப்பதற்கு கால அவகாசம் கோரியிருந்தனர்.
அதேவேளை, ஐந்தாவது எதிராளியான அஹமட் லெப்பை முகமது முத்தார், நீதிமன்ற அழைப்பாணை கிடைக்கப்பெறாத போதிலும் நீதிமன்றில் முன்னிலையாகியதுடன், நீதிமன்றத்தின் நிபந்தனைக்குட்பட்ட உத்தரவுக்குக் கட்டுப்படுவதாகவும், வழக்கிலிருந்து தம்மை விடுவிக்குமாறும் அவரது சட்டத்தரணி மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

இதனையடுத்து, எதிராளிகள் தமது தரப்பு விளக்கங்களை முன்வைப்பதற்காக எதிர்வரும் 16ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை நீதவான் ஒத்திவைத்தார்.
இந்தத் தகவலை வழக்காளியான வைத்தியர் சுகுணன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகலிங்கம் கிசோபனா தெரிவித்தார்.
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan