செம்மணி விடயத்தில் வாக்குறுதியை நிறைவேற்றுமா அரசாங்கம்..!
இலங்கைத் தீவில் போரின் போது யுத்த மீறல்கள், காணாமல் போதல்கள், படுகொலைகள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் பல வெளிவந்த நிலையில் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி இந்த விடயங்களில் சர்வதேசத்தினதும் ஐ.நாவினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
யாழ் குடா நாடு விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை இராணுவத்தால் மீட்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட பலர் கொல்லப்பட்டு செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய இனத்தின் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கிருசாந்தி கொலை
இதனை வலுப்படுத்தும் முகமாக செம்மணி பகுதியில் இராணுவத்தால் கொல்லப்பட்டு பலர் புதைக்கப்பட்டதாகவும் அது தொடர்பில் சாட்சியமளிக்க தயார் எனவும் மாணவி கிருசாந்தி கொலை வழக்கில் மரணதண்டனை கைதியாகவுள்ள இராணுவ கோப்ரல் ராஜபக்ச சோமரட்ண தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணையை முன்னெடுக்க சாட்சிகள் கிடைத்துள்ளன. சுயாதீனமான நீதித் துறைக்குள் கடந்த காலங்களைப் போல் அல்லாமல் அரசியல் தலையீடுகளின்றி விசாரணைகள் இடம்பெறுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.
செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டு கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 239 எலும்புக் கூடுகளும்,, 72 சான்றுப் பொருட்களும் கிடைத்துள்ள நிலையில் அவை அங்கு நடந்த கொடூரத்தை வெளிப்படுத்தும் சான்றுகளாகவுள்ளன.
அங்கு புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 14 இடங்களில் குவியல்களாகவும், சில இடங்களில் ஒன்றன் மேல் ஒன்றாக போடப்பட்டதாகவும் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.
அமர்ந்த நிலையில் ஒரு எலுப்புக் கூடு மீட்கப்பட்டுள்ளது. சிறியவர்களின் எலுப்புக்கூடுகள், சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதுடன், அதிகமான மனித எலும்புக்கூடுகள் ஆடைகளற்ற நிலையிலேயே புதைக்கப்பட்டுள்ளன. இதனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சுட்டிக் காட்டியுள்ளது.
தமிழர் என்ற காரணத்திற்காக ஒன்றுமறியா பாலகர்கள் முதல் முதியவர்கள் வரை கொல்லப்பட்டுள்ளமை தெரிகிறது.
மனிதப் புதைகுழிகள்
இவை செம்மணியில் நடந்த கொடூரம், அரச படைகளின் மிலேச்சத்தனம் என்பவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன், இனப் படுகொலைக்கான சாட்சியாகவும் உள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை விஜயம் செய்த போது செம்மணிக்கு சென்று பார்வையிட்டு இருந்ததுடன் அணையா விளக்கு போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களினது துயரங்களையும் அவதானித்து இருந்தார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் செம்மணி மனித புதைகுழி தொடர்பாக கரிசனை காட்டிய பிரித்தானியா நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை உணர்ந்தவராக செம்மணி விடயத்தில் கரிசனை காட்டியிருந்தார். வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 29 ஆவது அமர்வு கடந்த 22 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையில், இலங்கை தொடர்பான விவகாரம் ஆராயப்பட்டது.
இதன்போது இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் விவகாரத்தில் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து தடயவியல் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கை சார்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான தூதுக் குழு இதனை அறிவித்துள்ளது.
அனுர தலைமையிலான இந்த அரசாங்கத்திற்கு செம்மணி விவகாரம் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் தான் அரசாங்கத்தின் கருத்துக்கள் உள்ளனவா? என்பது பாதிக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் ஏக்கமாக உள்ளது. கடந்த காலங்களில் அவ்வாறே நடந்தது.
ஆனால் இந்த விடயத்தில் அரசாங்கம் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். காணாமல் போனவர்களின் எண்ணிக்கை சுமார் 12 ஆயிரத்து 600 என்று இருந்தாலும், உண்மையில் இந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என்று சில மதிப்பீடுகள் தெரிவிப்பது குறித்துக் ஐ.நாவில் கவலை வெளியிடப்பட்டது.
அகழ்வுப் பணி
காணாமல்போனோர் அலுவலகத்திடம் சுமார் 23,300 காணாமல் போனோர் வழக்குகள் உள்ளன. இதில் 3 ஆயிரத்து 700 இராணுவ அதிகாரிகள் மற்றும் சுமார் 16 ஆயிரம் பொதுமக்கள் அடங்குவர். காணாமல் போனவர்களில் சுமார் 93 சதவீதமானோர் ஆண்கள் என்றும், 33 சதவீதமானோர் 19 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் இதன்போது இலங்கை தூதுக் குழு தெரிவித்துள்ளது.
மூன்றாவது கட்ட அகழ்வுப் பணி தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
அதற்கான நிதி மற்றும் ஏனைய விடயங்களை அரசாங்கமே செய்து கொடுக்க வேண்டும். அதனை விரைவாக செய்து கொடுப்பதுடன் ஐ நாவில் வழங்கிய வாக்குறுதி போன்று சர்வதேசத்தின் ஒத்துழைப்பையும் இதய சுத்தியுடன் அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
ஆக, இலங்கையில் கண்டுபிடிக்கப்படுகின்ற ஒவ்வொரு மனித புதைகுழிகளும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்த கொடூரத்தையே வெளிப்படுத்துகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களினது தாய்மாரும் உறவுகளும் பல ஆண்டுகளை கடந்து போராடி வருகின்றனர். அவர்களில் பல தாய்மார் தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே மரணித்தும் உள்ளனர்.
இந்த தாய்மாரின் துயரங்களையும் அவர்களது நிலையையும் உணர்ந்து அரசாங்கமும் சர்வதேச சமூகமும் செயற்பட வேண்டும்.
செம்மணி போன்ற மனித புதைகுழிகளின் விசாரணையை நீதியாக முன்னெடுத்து சம்பந்தப்பட்ட படைத் தரப்பை சேர்ந்தவர்களுக்கு தண்டனையை பெற்றுக் கொடுப்பதன் மூலம் குறைந்தபட்சம் பரிகார நீதியை என்றாலும் பெற்றுக் கொடுக்க முடியும்.
அது பாதிக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்திற்கு ஆறுதலாக அமையும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 05 October, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.



