அதானி இலங்கையில் இருந்து விலகியமை தொடர்பில் அரசாங்கம் விளக்கம்
அதானி கிரீன் எனர்ஜியின் (Adani Green Energy) முன்மொழிவான மன்னார் காற்றாலை மின்சார திட்டத்தை இரத்து செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
எனினும், குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது குறித்து ஒரு உடன்பாட்டை எட்டத் தவறியதால் நிறுவனம் திட்டத்திலிருந்து விலகியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம், இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானியின், அதானி குழும துணை நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி, இலங்கையின் மன்னாரில் உள்ள அதன் காற்றாலை மின்சார திட்டத்திலிருந்து விலக முடிவு செய்தது.
அதானி குழுமத்தின் விலகல் முடிவு
இந்தநிலையில், அதானி குழுமத்தின் விலகல் முடிவு குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது அமைச்சர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
உள்ளூர் நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலமாகவோ குடிமக்கள் நியாயமான விலையில் மின்சாரத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக ஜெயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.
அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க செயல்பட்டு வருகிறது. சமீபத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் அலகு வீதத்தை அமெரிக்க டொலர் 0.0826 இலிருந்து குறைப்பது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது.
குறைந்த விலையில் மின்சாரம்
இதன்படி. இந்திய அதானி வழங்கும் கட்டணங்களைப் போன்ற குறைந்த விகிதத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தவும் முயற்சிக்கப்பட்டது.
துரதிர்ஸ்டவசமாக, ஒரு உடன்பாட்டிற்கு வர முடியவில்லை, இது அதானி திட்டத்தில் இருந்து வெளியேற முடிவு செய்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
எனினும் அதானியை விட குறைந்த விலையில் மின்சாரம் வழங்க மற்றொரு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதானி குழுமத்துடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் மீண்டும் ஈடுபடத் தயாராக உள்ளதா என்று கேட்டபோது, பேச்சுவார்த்தைகளை பரிசீலிப்பதற்கு முன்னர், அதானி எவ்வளவு விலையைக் குறைக்கத் தயாராக உள்ளது என்பதை அரசாங்கம் அறிந்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |