15 வயது சிறுமி விற்கப்பட்ட சம்பவம் - சட்டம் முறையாக செயற்படுத்தப்படும் என்கிறார் கெஹெலிய
கொழும்பு - கல்கிஸ்சையில் 15 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் சம்பவம் குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் சமூக நிலையை பொருட்படுத்தாமல் சட்டத்தை முறையாக அமுல்படுத்த வேண்டும் என்று அமைச்சரவை இணை செய்தி தொடர்பாளர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியரை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த பயன்படுத்தப்படும் வலைத்தளங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், இதுபோன்ற வலைத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற வலைத்தளங்கள் குடும்பங்களையும், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையையும் அழிக்கும் சம்பவங்களுக்கு இட்டு செல்கின்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற வலைத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
15 வயது சிறுமியை பயன்படுத்தி கல்கிஸ்ஸையில் இருந்து இயக்கப்பட்ட இணைய பாலியல் கடத்தல் தொடர்பு கடந்த ஜூன் மாதம் பொலிஸாரால் முறியடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் பாதிக்கப்பட்டவரின் தாய், பல அரசியல்வாதிகள் மற்றும் இலங்கை கடற்படையில் இணைக்கப்பட்ட இருதயநோய் நிபுணர் உட்பட மொத்தம் 41 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பணியகம் மற்றும் குற்றவியல் புலனாய்வுத்துறை உள்ளிட்ட பொலிஸ் துறையின் பல பிரிவுகளால் நடத்தப்படுகின்றன.