அரச ஊழியர்கள் குறித்து இன்று நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு
சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான அடிப்படை சம்பளத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்பர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்று ஜகத் குமார சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச ஊழியர்கள் குறித்து தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்த அரச ஊழியர்கள் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ளார்கள்.
பொருளாதார ரீதியில் பாதிப்பு
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் விவகாரம் இழுபறி நிலையில் உள்ளதால் இவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இவ்விடயம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளோம்.
சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி வரையான காலப்பகுதிகளை உள்ளடக்கிய வகையில் அடிப்படை சம்பளத்தை மாத்திரம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கப்படும். நகரசபைகள் மற்றும் பிரதேசசபை தேர்தல் கட்டளைச்சட்டத்தின் 102ஆவது உறுப்புரையின் பிரகாரம் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ளவர்கள் தேர்தல் இடம்பெறும் வரை சேவையில் ஈடுபட முடியாது.
ஆகவே அவர்களை மீண்டும் அரச சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முதலாம் இணைப்பு
அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தோற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்
மார்ச் 9ஆம் திகதி முதல் ஏப்ரல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அடிப்படைச் சம்பளத்தை வழங்குவதற்கு நேற்று (03.04.2023) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் அனைவருக்கும் அடிப்படை சம்பளம் வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.