அரசாங்கத்தின் தீர்மானங்களை எதிர்க்கும் அரச ஊழியர்கள்
கடந்த கால அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலை எமது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. எனினும் மாற்றங்களை செய்ய முற்படும்போது, அரச ஊழியர்கள் சிலர் அதற்கு எதிராக தர்க்கம் புரிகின்றனர் என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரச ஊழியர்களுடன் போராட வேண்டியேற்பட்டுள்ளது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக வீதிகளில் போராட வேண்டியிருந்தது. மக்களுக்காக ஊழல், இலஞ்சம் மற்றும் திருட்டுக்களுக்கு எதிராக நாங்கள் போராடினோம். தற்போது எங்களுக்கு மாற்றுத் தரப்பினருடன் போராட்டம் நடத்தவேண்டியேற்பட்டுள்ளது.
கடந்த காலத்தில், பழைய முறைப்படி எடுக்கப்பட்ட தன்னிச்சையான தீர்மானங்களின் காரணமாக மக்களின் உரிமைகளை பாதுகாக்க தவறிய அரச ஊழியர்களுடன் போராட வேண்டியுள்ளது.
மக்கள் வழங்கிய ஆணைக்கமைய, சில விதிமுறைகளுக்கு உட்பட்டு கடந்த அரசாங்க காலத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பான தீர்மானங்களை நாங்கள் எடுக்கும்போது அதற்கெதிராக சில அரச ஊழியர்கள் எம்மோடு தர்க்கம் புரிகின்றனர்.
மாற்றத்தை விரும்பாத மக்களும் மாற வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பல மாற்றங்களை செய்து நாங்கள் எங்களது பயணத்தை முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.