மத்திய வங்கி ஆளுநரின் தீர்மானத்தால் சர்ச்சை
மத்திய வங்கி ஊழியர் ஒருவரின் சம்பளம் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட்டால், நாட்டின் அரச ஊழியர்களின் சம்பளமும் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்றையதினம்(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநரின் தீர்மானம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரிப்பது நியாயமற்ற செயலாகும்.
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய வங்கி ஆளுநரின் இந்த தீர்மானம் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த அநீதியான செயலுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் அணி திரள்வார்கள்.
துண்டிக்கப்பட்டுள்ள மின்சாரம்
நாட்டில் மின்சாரக் கட்டணம் செலுத்த முடியாத 10 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், குழந்தைகள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில், மின்சாரம் தேவையில்லை எனவும், குப்பி விளக்குகளை வைத்து பிள்ளைகள் கல்விப் பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும் மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மின்துறை அமைச்சர் முதல் கீழ்நிலை அதிகாரி வரையிலான மன நிலையே இதுபோன்ற அறிக்கைகள் மூலம் காட்டப்படுகிறது.
அவர்களுக்கு மக்கள் மீது எந்த உணர்வும் இல்லை. தற்போதைய அரசாங்கம் நாட்டை ஆள தகுதியற்றது. நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |