கனடாவில் இரட்டை குடியுரிமை வைத்திருப்பவர்கள் அரச ஊழியராக பணியாற்ற முடியும்! இலங்கையின் நிலை குறித்து வெளியான அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் கனடா போன்ற பல அபிவிருத்தியடைந்த நாடுகளில், இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர் அரச அதிகாரியாகவோ அல்லது பாராளுமன்றத்தில் நுழைவதற்கோ எந்தத் தடையும் இல்லை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பின்னோக்கி பயணிக்கும் இலங்கை

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த நாட்டின் பழமையான மற்றும் பழங்குடி அரசியல் கலாசாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மீது நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதில் இருந்து விலகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டமூலத்தின் ஊடாக, உலகம் பாரிய அபிவிருத்தியை நோக்கி முன்னேறி வருகின்ற போதிலும் இலங்கை பின்னோக்கி பயணிப்பதாக தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் கனடா போன்ற பல அபிவிருத்தியடைந்த நாடுகளில், இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர் அரச அதிகாரியாகவோ அல்லது பாராளுமன்றத்தில் நுழைவதற்கோ எந்தத் தடையும் இல்லை.
பதவியில் இருந்து வெளியேறிய பசில்

இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுவதற்கு முன்னரே பசில் ராஜபக்ச பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்தார்.
எனவே, 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதால் அவர் எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை.
இந்த நடவடிக்கையானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை, மாறாக இது தேசத்தின் முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏதும் இல்லை, உறுப்பினர்கள் தமது விசுவாசத்தை தீர்மானிக்க சுதந்திரமாக இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எந்தவொரு கட்சி உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் உத்தேசம் இல்லை என தாம் நம்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.