மக்களைக் காப்பதே அரசின் கடமை! சஜித் அறிவிப்பு
அரசு சர்வதேச நிதி நிறுவனங்களின் அடிமைகளாக இருக்காமல், உடனடியாக மக்கள் நலன்புரித் திட்டங்களை ஆரம்பித்து நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
நேற்று(01.04.2026) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருள்
அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: "நாளுக்கு நாள் மக்களின் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகின்றது. எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதால், 2 கோடியே 20 இலட்சம் மக்களும் கடுமையான அழுத்தத்துக்கும் துயரத்துக்கும் ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக, ஆபத்தான நிலையிலுள்ள சிறுவர்கள் மற்றும் தாய்மார்களுக்காக யுனிசெப் அமைப்புடன் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

நாட்டில் கடுமையான உரப் பற்றாக்குறை நிலவுகின்றது. யூரியா மற்றும் விதைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருளும் கிடைப்பதில்லை.
சிறுபோக பருவம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், நெல், சோளம், தேயிலை உள்ளிட்ட பயிர்ச் செய்கைகளுக்குத் தேவையான உள்ளீடுகளை வழங்க ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் அரசு உடனடியாகக் கலந்தாலோசிக்க வேண்டும். பயிர்களுக்கு முறையான உத்தரவாத விலை இல்லாததால் விவசாயிகள் பெரும் நட்டத்தைச் சந்தித்துள்ளனர்.
நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற
புத்தாண்டுக்காக மூடப்படும் தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்குத் தேவையான அடித்தளத்தை அரசு அமைக்க வேண்டும்.
பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும்.

கடற்றொழிலாளர்கள், சுற்றுலாத்துறை மற்றும் சிறு தொழில்துறையினர் சந்தித்துள்ள வீழ்ச்சியிலிருந்து அவர்களைக் மீட்க முழுமையான தேசிய வேலைத்திட்டம் அவசியமாகும்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களைப் பாதுகாக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன், மக்களின் பொருளாதார, சமூக, கல்வி மற்றும் சுகாதார உரிமைகளை உறுதிப்படுத்துவது அரசின் கடமையாகும்.
இந்த நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பிலிருந்து அரசு விலக முடியாது. அதேவேளை, எதிர்க்கட்சியாக எம்மால் வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க நாம் தயாராகவே இருக்கின்றோம்" என்று சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.