சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆசிரிய சங்கம்
அதிபர், ஆசிரியர்களின் நியாயப்பூர்வமான சம்பள முரண்பாட்டுக்குக்கு தீர்வை வழங்குவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்று தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாலசேகரன் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலையில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" ஆளுங்கட்சியிலுள்ள அரசியல் பிரமுகர்களுக்கு அரசாங்கம் மீது உண்மையாலுமே விசுவாசம் இருந்தால், அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குமாறு கோரிக்கை விடுக்க வேண்டும். அதனைவிடுத்து அதிபர், ஆசிரியர்களை அச்சுறுத்துவது அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கையாகவே அமையும்.
ஒக்டோபர் 21 ஆம் திகதி 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் 98 வீதமான ஆசிரியர்கள் சமூகமளிக்கவில்லை. பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்கூட, சம்பள முரண்பாட்டைத் தீர்த்து வைக்குமாறே வலியுறுத்தினர்.
எனவே, அதிபர், ஆசிரியர்களின் நியாயப்பூர்வமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அடுத்து என்னவென்பது தொடர்பில் அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் ஒன்றுகூடி முடிவை அறிவிக்கும்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக்கருத்திற்கொண்டு இப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் முன்வரவேண்டும்.
அதேபோல ஆசிரியர் சமூகம்சார் தொழிற்சங்கங்களும் ஒன்றுபட
வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இப்பிரச்சினை மேலும் இழுபடும் அபாயம்
உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.



