இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும் - அரசாங்கம்
இலங்கை ஒரு நடுத்தர வருமான நாடாகவே இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன் அரசாங்கம் இந்த மாற்றுக்கொள்கையை குறிப்பிட்ட காலத்துக்கு மாத்திரமே முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் அனுமதி
இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்த பின்னர், இந்த அறிவித்தலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.
இலங்கையை குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்து குறைந்த வருமானம் கொண்ட நாடாக தரம் தாழ்த்துவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று முன்னதாக இன்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.
அத்துடன் உலகளாவிய வகைப்பாட்டின் படி இலங்கை ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்தது.
சலுகைக் கடன்கள்
எனினும் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து சலுகைக் கடன்களைப் பெற முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தனிநபர் வருமானம் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், அது 2022 இல் மேலும் சரிந்ததாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
இந்தநிலையில் இலங்கைக்கு சலுகைக் கடன் உதவிகளை வழங்குவதற்காக, உலகளாவிய
முகவர் நிறுவனங்கள் இலங்கையின் அந்தஸ்தைத் தரமிறக்குமாறு நிதி அமைச்சருக்குப்
பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் கூறினார்.