பேச்சு சுதந்திரத்துக்கு அரசாங்கம் சதி - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சீற்றம்
இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப் போலவே பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியிருக்கின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமை செயலகத்தில் தாபிக்கப்பட்டுள்ள டி.எஸ். சேனநாயக்க அரசியல் பீடத்தில் இன்று(11.07.2026) நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதஸ இவ்வாறு தெரிவித்தார்.
ஜனநாயக உரிமைகளை ஒடுக்கம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயக நாடொன்றில் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை என மூன்று முக்கிய தூண்கள் காணப்படுகின்றன.
இதற்கு மேலதிகமாக சுதந்திர ஊடகமும் மற்றுமொரு தூணாக விளங்குவதால், அது அரசமைப்பில் குறிப்பிடப்படாவிட்டாலும் அதனைப் பாதுகாக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கி பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழித்துள்ளது.

நிகழ்நிலை காப்புச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றை நீக்குவோம் என்று இவர்கள் ஏலவே கூறினாலும், அவை இன்னும் நடைமுறையில் இருக்கின்றமையோடு, தற்போது நாடாளுமன்றத்தில் பேசும் சுதந்திரம் கூட மீறப்பட்டு வருகின்றது.
இன்று விவசாயிகள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகள் குறித்து பேசுவதற்குக் கூட சுதந்திரம் இல்லை. தேர்தல் காலத்தில் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவோம் என பிரஸ்தாபித்தனர். இன்று அது 120 ரூபாவிற்கும் குறைந்த மட்டத்திற்கு வந்துள்ளது.
ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாவதாக விவசாய அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், விவசாயிகளின் தோள்களில் ஏறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் இன்று விவசாயிக்கு 17 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.






