எதிர்வரும் 15ம் திகதி முதல் நாடு முழுவதிலும் அறிமுகமாகும் புதிய வசதி
வாகன போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதங்களை, ஜனவரி 15 ஆம் திகதி முதல் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இணைய வழியில் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Online GovPay முறையின் மூலம் செலுத்த முடியும் என, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலை பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், வாகன விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்படும் சாரதிகள் இனி அபராதம் செலுத்துவதற்காக அலுவலகங்களுக்குச் சென்று நேரத்தை விரயமாக்க வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

எந்தவித சிரமங்களும் இன்றி அபராதத் தொகையை இணைய வழியில் செலுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் GovPay மூலம் அபராதம் செலுத்த தேவையான அனைத்து வசதிகளும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே GovPay வழியாக ரூ. 7.5 மில்லியன் மதிப்பிலான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் உட்பட ஜனவரி 15 முதல் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இந்த சேவை நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Online GovPay மூலம் அபராதம் செலுத்தும் முறை அமலுக்கு வருவதால், எதிர்காலத்தில் பொலிஸாருக்கு எதிரான லஞ்ச குற்றச்சாட்டுகள் எழுவதற்கான வாய்ப்பு குறையும் எனவும், இனி யாருக்கும் பொலிஸாருக்கு நேரடியாக பணம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன விதிமீறல் இடம்பெறும் இடத்திலேயே ஆன்லைனில் அபராதத்தை செலுத்த முடியும் எனவும், பணம் செலுத்தியதை உறுதிப்படுத்தும் தகவல் உடனடியாக செலுத்துபவரின் கைப்பேசிக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த முழு செயல்முறைக்கு இரண்டு முதல் மூன்று நிமிடங்களே ஆகும் என்றும் அவர் கூறினார். லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் குற்றம், அத்தகைய குற்றங்கள் கண்டறியப்பட்டால் குற்றவியல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்.