முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்! சினிமா பாணியில் கோட்டாபய - ஆனால் நடப்பது?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ அதிகாரியாக இருந்தவர் என்ற வகையில், கொள்கையளவில் பிடிவாதங்களையும் இறுக்கமான போக்கினையும் காட்டி வருகின்றார்.
அந்தவகையில் முன்வைத்த காலைப் பின் வைக்கமாட்டேன் என்று சினிமா படத்தில் வரும் படையப்பா பாணியில் கூறிவருகின்றார். ஆனால் செயற்பாட்டு ரீதியில் பிடிவாத நிலைப்பாடுகள் தோல்வியடைகின்ற போதல்லாம் தனது கால்களை பின்நோக்கி வைக்கத் தொடங்கிவிட்டார்.
விவசாயத்துறையில் நஞ்சற்ற உணவு என்றார், அதற்காக பசுமைப்புரட்சி என்றார், அதனால் இரசாயனத்தை தடை செய்தார், விளைவு நெல்லுற்பத்தி பாரிய இழப்பைச் சந்தித்தது. விவசாயிகள் கொதிப்படைந்துள்ளார்கள். இப்போது ஜனாதிபதி சொல்கிறார் விவசாய உற்பத்தி விடயத்தில் இரசாயன வளமாக்கியைத் தடைசெய்தது தனது தவறு என்கிறார்.
இனி வருங்காலத்தில் இரசாயன வளமாக்கியை விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் சர்வதேச நாணயநிதியத்திடம்(IMF) நிபந்தனைகளுக்குப் பணிந்து கடன் பெறமாட்டோம் என்று இந்த அரசாங்கம் கூறியது. இப்போது அங்கு கடன் பெறுவதற்காக நிதியமைச்சர் அலிசப்ரி தலைமையிலான குழு அமெரிக்கா சென்றுள்ளது. ஜனாதிபதி இப்போது சொல்கிறார்,இதனை முன்கூட்டியே செய்திருக்கலாம் என்று.
இந்தியாவுக்குத் கொழும்புத் துறைமுக முனையத்தை வழங்க முடியாது எனக்கூறிய இவ் அரசாங்கம் பின்னர் வழங்கிவிட்டது.
19ஆவது அரசியல் யாப்புத்திருத்தத்ததை நீக்கி 20ஆவது திருத்தத்தை கொண்டு வந்தார்கள். இப்போது 20ஐ நீக்கிவிட்டு 19ஆவது திருத்தத்தை ஒத்த 21ஆவது திருத்தத்தை விரைவில் இந்த அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கிறது.
அமைச்சரவையை ஓரிரு விதிவிலக்குகளுக்கு அப்பால் சிங்கள அமைச்சரவையாக அமைக்க முற்பட்டார்கள். அதன்படி அதாவுல்லாவுக்குக் கூட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. தற்போது பல்லினத்தவர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்டடுள்ளது.
புலம் பெயர்ந்த தமிழர்களையும் தமிழமைப்புகளையும் விடுதலைப்புலிகள் சார்ந்தவர்கள் என்று தடைசெய்தார்கள். இப்போது அவர்களை டொலர்களுக்காக நாட்டுக்குள் அழைப்பதற்கு தயார் நிலையில் உள்ளார்கள்.
அமெரிக்காவை வேண்டத்தகாத நாடாக எதிர்த்தார்கள்.பின்னர் மீன்சக்திப் பிறப்பாக்கல் திட்ட முதலீட்டுக்கு அணைத்துக்கொண்டார்கள்.
அடிப்படைவாத அரசியல் யாப்பினைப் புதிதாக் கொண்டுவர முயற்சித்தார்கள் அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மொத்தத்தில் தற்போதைய ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த காலைப் பின்வைக்க மாட்டேன் என்று குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் முன்வைத்த கால்கள் ஒவ்வொன்றாய் பின்நோக்கி நகருகின்றன.
பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களால் தான் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களது அபிலாசைகளை தான் நிறைவேற்றப்போவதாகவும் ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் இன்று சிங்கள மக்கள் தமது அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி காலிமுகத்திடல் உட்பட வீதிகளில் இறங்கி இயல்பூக்கத்தால் உந்தப்பட்டு தன்னெழுச்சிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவற்றை அடக்க முடியாத நிலையில் ரம்புக்கனையில் பொலிஸார் துப்பாகிப் பிரயோகம் செய்துள்ளனர். இதில் 28 சிங்கள சகோதரர்கள் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் மரணித்துள்ளார். நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளார்கள். அந்தவகையில் சிங்களமக்களின் அபிலாசைகளையும் பாதுகாப்பையும் ஜனாதிபதியால் நிறைவேற்ற முடியவில்லை.
இதனால் ‘கோட்டா கோ ஹோம்’ (Gotta go home) என்ற கோசம் நாடுபூராக முழங்க ஆரம்பித்து விட்டது.காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக மக்களின் போராட்டம் 13 நாட்களாகத் தொடர்கிறது. இந்த நிலையில் ஜனாதிபதி வேகமாகத் தனது கால்களை பின் நோக்கி நகர்த்த வேண்டியவராக்கப்பட்டுள்ளார்.
பட்டறிவுகளைப் பரிகசித்தால் நட்டந்தான் நாட்டை அணைக்கும். விவசாயிகளின் பட்டறிவுக்கு செவிசாய்த்திருந்தால் விவசாயம் நட்டத்தில் மூழ்கியிருக்காது. இப்போது தான் ஜனாதிபதி அந்தப் பட்டறிவை விளங்கியுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் இந்த நாடு புலம்பெயர்ந்த நம்முறவுகளின் சாதுரியத்தாலும் டொலர்களாலும் அபிவிருத்தியடையும் என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள முடியாதவராக உள்ளார் என்பதுதான் வேதனையான விடயமாகும்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam