கோட்டாபய மிக விரைவில் நாடு திரும்புவார்:சாகர காரியவசம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிக விரைவில் ஒரு தினத்தில் இலங்கை திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அழகான சூழ்நிலையில் கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறவில்லை
மிக விரைவில் முன்னாள் ஜனாதிபதி இலங்கைக்கு வருவார்.அவர் இலங்கையில் இருந்து சென்ற நிலைமையை நாம் அனைவரும் அறிவோம்.அழகான சூழ்நிலையில் அவர் இலங்கையில் இருந்து செல்லவில்லை.
முன்னாள் ஜனாதிபதி நாட்டுக்கு வரும் போது அவருக்கு மீண்டும் பாதுகாப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு தகுந்த வசதிகளை வழங்க வேண்டும். தற்போது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என நான் நினைக்கின்றேன்.
மிக விரைவில் அவர் இலங்கை வருவார் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட மிகப் பெரிய மக்கள் போராட்டம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து தப்பிச் சென்றார்.
முன்னாள் ஜனாதிபதி அடுத்த மாதம் நாடு திரும்புவார்
முதலில் மாலைதீவு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்று இரண்டு வாரங்களுக்கு மேல் தாங்கியிருந்தார். சிங்கப்பூரில் இருந்து அவர் தாய்லாந்து சென்றதுடன் தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.
தாய்லாந்தில் தங்கியிருக்க முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று மாதங்களுக்கான விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி இலங்கை திரும்புவார் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்புவார் என அவரது உறவினரும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க கூறியிருந்தார்.
எனினும் அடுத்த மாத ஆரம்பத்தில் அவர் நாடு திரும்புவார் என உதயங்க வீரதுங்க பின்னர் கூறியிருந்தார்.