இலங்கை அரசியல் வரலாற்றில் கோட்டாபய படைத்த இரண்டு சாதனைகள்! மூன்றாவது சாதனைக்கும் தயார்...
பௌத்தத்தோடும் சிங்கள மொழியோடும் பின்னிப் பிணைந்த இலங்கை அரசியல் வரலாற்றில், ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ளவும், நீடித்து நிலைத்திருக்கவும், இவ்விரண்டையும் தமது மந்திர உச்சாடனமாக அதிகார தரப்பினர் கொண்டிருந்தனர். கொண்டிருக்கின்றனர்.
இற்றை வரைக்கும் இலங்கை அரசியல் வரலாற்றை தீர்மானிப்பது பௌத்தமும் சிங்கள மேலாண்மை வாதமும் அன்றி வேறு ஒன்றாக இருந்ததில்லை. அப்படியொரு மந்திரத்தை உச்சரித்தே ராஜபக்ச தரப்பு மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது.
இலங்கையை மீட்பதும், காப்பதும் தம்மைத் தவிர வேறு ஒருவர் இல்லை என்பதை சிங்கள மக்களிடையே ஆழப் பதியச் செய்து மீண்டும் மீண்டெழுந்தனர். ஆனால், அனைத்தும் இரண்டு ஆண்டுகளில் தவிடு பொடியானது என்பதை அவர்களே உணர்ந்து கொண்டார்கள்.
மைத்திரி ரணில் கூட்டாட்சியை நம்புவதால் எதுவும் ஆகப்போவதில்லை என்பதை சிங்கள மக்களிடம் எடுத்துச் சென்றதுடன், ராஜபக்சக்களின் கைகளிலேயே தேசிய பாதுகாப்பு இருப்பதாகவும், போரை முடித்த கோட்டாபயவே நாட்டை பாதுகாப்பார் என்பதையும் தெள்ளத்தெளிவாக மக்களிடம் கொண்டு சேர்த்தனர். கோட்டாபயவின் வெற்றியும் அதனையே வெளிப்படுத்தியது.
இலங்கை வரலாற்றில் தனிப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற ஒரேயொரு ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச உருவெடுத்தார். அவரின் வெற்றி என்பது சிங்கள மக்களின் மீட்சியாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய, தான் இந்த நாட்டின் வரலாற்றை மாற்றியமைத்ததாக சூளுரைத்தார்.
இலங்கையில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி தான் வெற்றியீட்டியதாகவும், பெரும்பான்மை மக்களின் வாக்குகளை மட்டும் கொண்டு வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். அவரின் வார்த்தைகள் தவறானதும் அல்லது.
முதலாவது சாதனை
உண்மையில் இலங்கை அரசியல் வரலாற்றில் தனிப் பெரும்பான்மை மக்களின் அதுவும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி வெற்றி பெற்ற ஒரே ஜனாதிபதி என்ற சாதனையை கோட்டாபய படைத்தார். அது அவரின் முதலாவது சாதனையாக கொள்ள முடியும்.
அதிகாரத்தைப் பொறுப்பேற்ற கோட்டாபய, அரச அலுவலகங்கள், திணைக்களங்கள், கிராமங்கள் என்று ஆரம்பத்தில் தன்னை மக்கள் நாயகனாக மாற்றும் விம்பத்தை கட்டமைத்தார்.
எனினும், எடுத்த பொருளாதாரக் கொள்கையும், கட்டமைத்த அமைச்சரவையும், எடுக்கப்பட்ட முடிவுகளும், நிறைவேற்று அதிகாரமும் கோட்டாபயவின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு நிலைமை மாறியது. தான் எடுத்த முடிவுகளிலிருந்து கீழிறங்காமல், அதனை நிறைவேற்றியதன் விளைவுகளை அவரே அறுவடை செய்யும் அளவிற்கு இரண்டு ஆண்டுகளில் நிலைமை தலைகீழானது.
தனிப்பெரும்பான்மை மக்களின் வாக்குகளால், சிறுபான்மை மக்களின் ஆதரவு இன்றி வெற்றி பெற்றவன் என்ற அந்த அகந்தையை அதே பெரும்பான்மை மக்கள் இழக்கச் செய்திருக்கிறார்கள்.
இரண்டாவது சாதனை
இலங்கையில் ஏற்பட்ட இந்தப் பொருளாதார சீரழிவின் பின்னர், சிங்கள மக்கள் விழித்துக் கொண்டனர் என்கிறார்கள் தென்னிலங்கை அரசியல் பேச்சாளர்கள். சிங்கள பௌத்த அடிப்படை வாதங்களால் ஏமாற்றப்பட்டோம் என்பதை சிங்கள மக்களில் கணிசமானவர்கள் உணர்ந்தார்கள் என்பதை அண்மைய போராட்டங்கள் எடுத்தியம்பியது.
குறிப்பாக கூறின், இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு ஜனாதிபதிக்கு எதிராகவும் பொதுமக்கள் வீதிக்கு இறங்கியது இல்லை. ஜேவிபி கிளர்ச்சியாகட்டும், விடுதலைப் புலிகளின் போராட்டமாகட்டும், அனைத்துமே அதிகார மையத்திற்கு எதிராக இருந்ததே அன்றி, தனி ஒரு ஜனாதிபதிக்கு எதிராக இருந்தது இல்லை என்பது வரலாறு. இவ்வாறிருக்க, கோட்டாபய ராஜபக்ச தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி.
அவருக்கு எதிராக சொந்த மக்கள், அதாவது, அவரே கூறிய தனிப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவன் என்ற அதே மக்கள் இன்று வீதியில் இறங்கி வீட்டுக்குச் செல்... என்று கத்தும் அளவிற்கு சாதித்திருக்கிறார் கோட்டாபய.
ஆக, இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி ஒருவரை பொது மக்களே வீட்டுக்குச் செல் என்று கூறும் அளவிற்கு இரண்டாவது சாதனையை படைத்திருக்கிறார் கோட்டாபய.
மூன்றாவது சாதனை
மூன்றாவதாக, கோட்டாபய ராஜபக்ச பதவி துறந்தால்.... இரண்டு ஆண்டுகளை சோதனைகளோடு கடந்திருக்கிறார் கோட்டாபய. ஆனால், அவரின் பதவி பறிப்பு தொடர்பில் தற்போது பேசப்படுகிறது. குறிப்பாக கோட்டாகோஹோம் என்னும் கோசம் அவரை வீட்டுக்கு அனுப்பும் ஆரம்ப புள்ளி...
அதுமாத்திரமன்றி போராட்டக்காரர்கள் முதலில் கோட்டாபயவையே பதவி துறக்குமாறு வீதியில் இறங்கினர். ஆனால் பதவியை துறந்தது மகிந்தவும், அமைச்சரவையும். யாரை மக்கள் வீட்டுக்குப் போகச் சொன்னார்களோ அவர் இன்னமும் பதவி விலகவில்லை. ஆனால், தற்போதைய நெருக்கடி நிலை நீடிக்குமாயின் மக்கள் புரட்சி தீவிரமாக வெடிக்கும் என்கின்றன தென்னிலங்கை தகவல்கள். அப்படியொரு தீவிரப் போக்கு ஏற்படுமாயின் கோட்டாபய பதவியை துறக்கம் சூழல் ஏற்படும் என்கிறார்கள்.
அதுமாத்திரமன்றி, எதிர்கட்சிகளும் கோட்டாபய பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் கோரி வருகின்றன. ஆக, கோட்டாபய ராஜபக்ச இவ்வளவு எதிர்ப்புக்களையும், போராட்டங்களையும் சந்தித்தாலும், தான் தோல்வியுற்ற ஜனாதிபதியாக பதவி விலகமாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.
எனினும், அடுத்த சில வாரங்கள் நிலைமை மோசமானதாக அமையுமாயின் அவர் பதவி துறப்பதைத் தவிர வேறு ஒரு மாற்றத்தை செய்ய முடியாது என்கிறார்கள் தென்னிலங்கை அரசியல் அவதானிகள். அப்படி பதவியை கோட்டாபய துறப்பாராயின் இலங்கை வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் மக்கள் எதிர்ப்பின்பால் பதவியை துறந்த முதல் ஜனாதிபதி என்ற சாதனையை படைப்பார்.
அதுவே அவரின் மூன்றாவது சாதனையாகவும் இருக்கும். இலங்கை அரசியல் வரலாற்றில் அவர் பதிக்கும் பெரும் தடமாகவும் அது அமையும். அதை எண்ணியோ என்னமோ அவர் தான் தோல்வியுற்ற ஜனாதிபதியாக வீட்டுக்குச் செல்லமாட்டேன் என்று கூறியிருக்கலாம்....