சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை! கோட்டாபயவின் பதவி விலகலும் ரணிலின் நம்பிக்கையும்
சர்வகட்சி அரசாங்கத்தின் மூலம் வலுவான மற்றும் நிலையான நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும். இதன் மீது காணப்படும் நம்பிக்கையை ஜனாதிபதி கைவிட்டதாகத் தெரியவில்லை என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சர்வகட்சி அரசாங்கத்தை நாம் உருவாக்க மாட்டோம்' என்று கூறும் நிலைமை இன்னமும் ஏற்படவில்லையென்றே நான் கருதுகிறேன். இதுபற்றிய கருத்தாடல்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை
சுதந்திரக் கட்சியே சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான முன்மொழிவை முதலில் வைத்தது. இதன் மீது எமக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாலேயே கட்சிக்குள் எனது முழு ஆதரவையும் அளித்தேன்.
நாட்டில் நிலையான அரசாங்கமொன்று இருக்க வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும்.
பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, நிலையான நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதே முதன்மையானது. இதற்கான சிறந்த அடித்தளமாக சர்வகட்சி அரசாங்கம் அமையும்.
கோட்டாபயவின் பதவி விலகலும் ரணிலின் நம்பிக்கையும்
மக்களின் எதிர்ப்பலை காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பதவி விலக வேண்டிய நிலைமை உருவானது. இந்தத் தருணத்தில் தேர்தலுக்குச் செல்வதற்கான சாத்தியம் இல்லை.
எனவே, சர்வகட்சி அரசாங்கத்தின் மூலம் வலுவான மற்றும் நிலையான நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும். இதன் மீது காணப்படும் நம்பிக்கையை ஜனாதிபதி கைவிட்டதாகத் தெரியவில்லை.
அரசியல் என்று வரும்போது ஒவ்வொரு கட்சியும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து சிந்திக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால்தான் இந்த செயல்முறை தாமதமாகிறது என்று நினைக்கிறேன்.
எவ்வாறாயினும், போட்டியின் வாரிசு யார் என்பதை கருத்தில் கொள்ளாமல் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை சமாளிக்கும் முக்கிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.