கோட்டாபயவின் சிங்கப்பூர் விஜயத்தில் திடீர் திருப்பம் - தனியார் ஜெட் விமானத்திற்காக காத்திருப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு அரசாங்கத்திடம் தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையிலிருந்து வெளியேறியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இன்று அதிகாலை மாலைதீவை சென்றடைந்தார்.
இந்நிலையில், இன்றிரவு மாலைதீவில் இருந்து SQ437 விமானம் மூலம் சிங்கப்பூர் செல்லவிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. உள்ளூர் நேரப்படி இன்றிரவு 23.35 மணிக்கு சிங்கப்பூர் செல்லவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறன நிலையிலேயே, தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு அரசாங்கத்திடம் தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவி விலகாத ஜனாதிபதி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்றிருந்தது.
இந்நிலையிலேயே, அண்மையில் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் பதவி விலகவுள்ளதாக அறிவித்திருந்த போதிலும் அவர் பதவி விலகவில்லை. எனினும், பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்வை நியமித்துள்ளதாக சபாநாயகருக்கு அறிவித்திருந்தார்.
தற்போது மாலைதீவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி இன்றிரவு சிங்கப்பூர் செல்லவுள்ளதாக முன்னாத தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதன் ஒரு பகுதியாக மாலைதீவு தலைநகரில் அமைந்துள்ள மாலே சர்வதேச விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.