கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரக்கூடாது - உதயங்க வீரதுங்க கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரக்கூடாது என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச அரசியல் அறிவு இல்லாதவர். எனினும், சில பதவிகளில் திறமையான நிர்வாக அதிகாரி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வந்தால் அது முட்டாள்தனம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வார இறுதி நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச சிறந்த முடிவினை எடுப்பார்
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் அவரே சிறந்த முடிவினை எடுப்பார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்து பேசிய மகிந்த ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்ச
இதேவேளை, மக்கள் போராட்டம் காரணாக நாட்டில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று (02) இரவு நாடு திரும்பினார். நேற்று இரவு 11.45 மணியளவில் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் மூலம் அவர் இலங்கையை வந்தடைந்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜூலை 14ம் திகதி விமானப்படை விமானம் மூலம் மாலைதீவுக்குச் சென்றார்.
பின்னர், மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதியும் அவரது மனைவியும் ஆகஸ்ட் 11ம் திகதி வரை அந்நாட்டில் தங்கியிருந்தனர். அதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து சென்றுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஒரு மாதம் 19 நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு நாடு திரும்பினார். முன்னாள் ஜனாதிபதியை வரவேற்க அமைச்சர்கள் பலரும் விமான நிலையத்திற்குச் சென்றிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.