நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்த மகிந்த!
நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று காலை அவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50 இற்கும் மேற்பட்டோர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து நலம் விசாரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்சவிற்கு பலத்த பாதுகாப்பு
இதேவேளை,பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த கோட்டாபய ராஜபக்ச பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அரசாங்கத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றடைந்துள்ளார்.
நாடு திரும்பியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் வரப்பிரசாதம் என்பன வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கு அமைவாக பிரமுகர் பாதுகாப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.