கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் - கனடாவின் எதிர்க்கட்சி வேட்பாளர் கோரிக்கை
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச நீதிமன்றில் முன்நிறுத்தும் கோரிக்கையை ஆதரிப்பதாக கனேடிய எதிர்க்கட்சியான கன்சவேடிவ் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் முன்னணியில் உள்ள பியர் பொலிவேரா தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிமன்றத்தை உறுதிசெய்ய கனடா அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பை கொண்டுவருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
தற்போது சிங்கப்பூரில் இருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான கோரிக்கைகளில் இலங்கையின் மனித உரிமை சட்டத்தரணிகளுடன் இணைந்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்குகிழக்கை இராணுவமயமற்ற பகுதிகளாக்க வேண்டும்
போரினால் கணவனை இழந்த பெண்களுளுக்கு இழப்பீடுகளை வழங்குமாறும் இலங்கையின் வடக்குகிழக்கை இராணுவமயமற்ற பகுதிகளாக்குமாறும் ஒரு தசாப்தத்திற்கு மேலாக வலியுறுத்தி நின்றோம்.
ஆனால் அமைதியான எவ்வித போராட்டங்களும் அற்ற வடக்குக்கிழக்கு உலகில் அதிக இராணுமயமாக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாக மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இன்றைய குழப்பத்திற்கும் சீர்கேட்டிற்கும் ராஜபக்ச அரசே காரணம் என்ற எமது புரிதலை இன்று உலகே புரிந்துள்ளது. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு பின்னர் நல்லிணக்கத்தை நீண்டகாலம் நாம் வலுயுறுத்தியதுடன் அரசியல் கைதிகளின் விடுதலையையும் கோரிநின்றோம்.
அத்துடன் அதிகார வெறி கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒளித்துவிடுங்கள் என்ற இலங்கை மக்களின் கோரிக்கைக்கு மரியாதை செலுத்துமாறும் வேண்டுகிறோம்.
யாழில் கனடிய துணைத்தூதுவராலயம்
அத்துடன் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒத்தாசையாக யாழில் கனடிய துணைத்தூதுவராலயத்தை அமைப்போம் எனவும், போர் குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கன்சவேட்டிக் கட்சிக்கான புதிய தலைவருக்கான தேர்தலில் அக்கட்சியின் உறுப்பினர்கள் தற்போது வாக்களித்து வருகின்றனர். அதன் முடிவுகள் வரும் செப்டம்பர் 10ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
இதில் கன்சவேட்டிவ் கட்சியின் முன்னாள் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் உட்பட பலரின் ஆதரவைப் பெற்றிருக்கும் பியர் பொலிவேராவே வெற்றிபெறுவார் என்ற நிலையில் அவர் ஈழத்தமிழர் விவகாரத்தில் இவ்வளவு காத்திரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈழத்தமிழர் விவகாரத்தில் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்ப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட்டை இவ்விவகாரத்தில் தனது ஆலோசகராகவும் நியமித்துள்ளார்.