நாளை மறுதினம் நாடு திரும்புகின்றார் கோட்டாபய ராஜபக்ச - வெளியாகியுள்ள தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) நாடு திரும்பத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய அவர் மாலைதீவு மற்றும் சிங்கப்பூர் வழியாக தாய்லாந்து சென்று அங்கு சில வாரங்களை கழித்தார்.
கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வந்தவுடன் முன்னாள் ஜனாதிபதிக்கான சிறப்புரிமைகளை அவர் அனுபவிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பாதி காலம் முடிவதற்கு முன்பே பதவியை விட்டு விலகிய கோட்டாபய
நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி வரலாற்றில் தனது பதவியை இராஜினாமா செய்த முதலாவது ஜனாதிபதியாகக் கருதப்படும் கோட்டாபய ராஜபக்ச, ஜூலை 13ம் திகதி அதிகாலையில் நாட்டை விட்டு வெளியேறினார்.
தனது பதவிக்காலத்தின் பாதி காலம் முடிவதற்கு முன்பே அவர் பதவியை விட்டு விலகினார். இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக விமானத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்சவும் மாலை 4:30 மணியளவில் மாலைதீவுக்கு புறப்பட்டுச் சென்றதையடுத்து, மாலைதீவில் ஒரு நாள் மட்டுமே தங்கியிருந்த நிலையில், ஜூலை 14ம் திகதி சிங்கப்பூர் சென்றுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இரண்டு வாரங்களுக்கு மாத்திரம் விசா வழங்குவதாக முதலில் தெரிவித்த சிங்கப்பூர் அரசாங்கம், பின்னர் மேலும் இரண்டு வாரங்களுக்கு அதனை நீட்டித்திருந்தது.
சரியான தருணம் இன்னும் வரவில்லை
பின்னர் ஆகஸ்ட் 11ம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவியும் தனி விமானம் மூலம் தாய்லாந்துக்கு புறப்பட்டனர். தாய்லாந்தில் சுமார் 3 வாரங்கள் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பவுள்ளார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், கடைசி நேரத்தில், பாதுகாப்பு தொடர்பான பல சிக்கல்கள் காரணமாக அவரது வருகை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுடன் நடத்திய கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவர் நாடு திரும்புவதற்கான சரியான தருணம் இன்னும் வரவில்லை என தெரிவித்திருந்தார்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் அவரை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.