இலங்கை பிரஜையான கோட்டாபய ராஜபக்சவிற்கு நாட்டிற்கு வர உரிமை உண்டு! விஜித ஹேரத் கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியவுடன் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச இலங்கை பிரஜை என்பதாலேயே அவர், இந்த நாட்டின் குடிமகனாக நாட்டிற்கு வர உரிமை உண்டு என அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.
எனினும், அவர் இனி நாட்டின் ஜனாதிபதியாக இல்லை. ஜனாதிபதிக்கான விலக்குரிமையும் இல்லை. எனவே அவர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும்.அவருக்கு எதிராக சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று விஜித ஹேரத் கூறியுள்ளார்.
போராட்டக்காரர்களை அடக்கி வேட்டையாடும் அரசாங்கம்
இதேவேளை, அமைதியான போராட்டக்காரர்களை அடக்கி வேட்டையாடும் கோழைத்தனமான நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹேரத் கோரியுள்ளார்.
மக்கள் எதிர்கொள்ளும் எரிபொருள்,எரிவாயு,உரம் மற்றும் மருந்துப் பற்றாக்குறையைத் தீர்ப்பதன் மூலம் மட்டுமே போராட்டத்தை நிறுத்த முடியும். அடக்குமுறை அல்லது மிரட்டல் மூலம் இதை ஒருபோதும் நிறுத்த முடியாது.
அடக்குமுறைக்கு எதிராக மேலும் மேலும் மக்கள் முன்வருவார்கள்.அது அரசியல்
நெருக்கடியை மோசமாக்கும். அரசியல் நெருக்கடி மோசமடைந்தால், பொளாதார
நெருக்கடிக்கான தீர்வுகளும் தாமதமாகும் என்று விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.