அமெரிக்காவில் இலங்கை ஜனாதிபதியின் பகிரங்க அழைப்பு - புலம்பெயர் தமிழர்கள் வெளிப்படுத்தியுள்ள விடயம்
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres) உடன் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) நடத்திய பேச்சுவார்த்தையின் போது தமிழ் மக்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழுகின்ற சமாதானத்தை விரும்பும் தமிழ் சமூகத்தினர் தமது வரவேற்பையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக உள்ளக பொறிமுறை ஊடாக, நீண்ட காலமாக நிலவி வருகின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்தினருக்கு ஜனாதிபதி பகிரங்கமாக விடுத்துள்ள அழைப்பை புலம்பெயர்வாழ் தமிழ் சமூகத்தின் 95 சதவீதத்திற்கும் அதிகமான தமிழர்கள் வரவேற்றுள்ளதாக ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழரான அனஸ்லி ரட்ணசிங்கம் (Annesley Ratnasingham) அரச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைகளில் நீண்டகாலமாக அடைபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை துரிதமாக விசாரணை செய்து விரைவாக விடுதலை செய்வதற்கு தான் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்வேன் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடம் ஜனாதிபதி அளித்த உறுதிமொழியை ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் வரவேற்றுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, காணாமல் போனோர் விடயத்தில் ஆரம்பம் முதலே மிகவும் கரிசனையாகச் செயற்பட்டுவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அது தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திடம் வழங்கிய உறுதிமொழியை தமிழ் அரசியல் தலைவர்கள் உட்பட மக்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.
மிக விரைவாக இந்த தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுவிப்பார் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு உள்ளதாக இந்துமத குருவான பிரம்மஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திர குருக்கள் (Shivsree Ramachandra Gurus Babu Sharma) கருத்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தெரிவித்துள்ள இந்த விடயங்கள் குறித்து தமிழ் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து சிந்தித்து செயற்பட வேண்டும். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பானது புலம்பெயர் வாழ் சமூகத்திற்கு இலங்கையில் வந்து முதலீடுகளை மேற்கொண்டு தமது சொந்த நாட்டில் இருப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைய இருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி (V. Anandasangaree) குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் மற்றும் உண்மையான சமாதானத்தை விரும்பும் தமிழ் அரசியல் தலைவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆனந்தசங்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் தொடர்பான வரவேற்புகள் குறித்த பதிவுகளை புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பலரும் தமது முகநூல் மற்றும் டுவிட்டர் ஊடாக பதிவுகளை செய்து வருகின்றனர்.
அதேபோன்று உள்நாட்டிலும் பல ஆன்மீக மற்றும் தமிழ் அமைப்புகள் ஜனாதிபதியின் உறுதி மொழிகள் குறித்து தமது வாழ்த்துக்களை ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்து வருகின்றன.
டென்மார்க் நகரில் வாழும் கரவை ஊரான் தர்மகுலசிங்கம் (Tharmakulasingam) இது குறித்து தெரிவிக்கையில், ஜனாதிபதியின் அறிவிப்பை ஒரு நல்லதொரு வாய்ப்பாக தமிழ் மக்கள் கருத வேண்டும். இதனை சரிவர புரிந்துகொண்டு செய்து முடிப்பது தமிழ் மக்களது தலைமைகளின் கைகளிலே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
புலம்பெயர் தமிழர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய நியூயோர்க்கிலிருந்து விடுத்துள்ள கோரிக்கை

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
