கைதினை தடுக்க அவசரமாக மனுத்தாக்கல் செய்த கோட்டாபய! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
புதிய இணைப்பு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கக்கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்துள்ள மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுவானது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அமர்வின் போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மேலதிக கருத்துகளை முன்வைத்துள்ளார்.
இதன்பின்னர், இந்த மனு மீதான மேலதிக விசாரணை மற்றும் சமர்ப்பணங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கக்கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (24) நடைபெற உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைக் கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பெயரிடப்பட்டுள்ள பிரதிவாதிகள்
சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.