கோட்டாபய வெளியே போ! நிறைவேற்று அதிகாரங்களை ஒழியுங்கள்: பகிரங்க அறைகூவல்(Video)
இனிவரும் ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டுமே தவிர நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சியாக இருக்க கூடாது என கோட்ட கோ கம செயற்பாட்டாளரும் முன்னணி நடிகருமான பீட்டர் டல்மெடா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“கட்சிக்காரர்களின் செயற்பாடு தொடர்பில் நான் இரண்டு நிமிடத்தில், இரண்டு விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.
நாங்கள் அதாவது இந்த கோட்ட கோ கம போராடடக்காரர்கள் இளைஞர்கள் அனைவரும் போராடியது கோட்டாபய வெளியில் செல்ல வேண்டும் என்பதற்காகவே.
இன்றைக்கு தோற்றுபோன ஒரு அரசாங்கத்தின், நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கட்சி தலைவர்களை கூட்டத்திற்கு அழைத்துள்ளார். இந்த கலந்துரையாடலில் கட்சி தலைவர்கள் அனைவரும் சேர்ந்து கோட்டாபய வெளியில் செல்ல வேண்டும் என தீர்மானம் எடுப்பார்களாம் இது ஒரு நகைச்சுவையான விடயம்.
இது உங்களால் முடியாத விடயம் என்பதால் தான் மக்கள் அனைவரும் இணைந்து இதை செய்துள்ளனர்.இந்த நேரத்தில் நீங்கள் இவ்வாறு நகைச்சுவையாக நடந்து கொள்வது தவறான செயல். இது மக்களின், இளைஞர்களின் போராடடத்தை கொச்சைபடுத்தும் செயலாக தான் நான் பார்க்கிறேன்.
இரண்டாவது விடயம் நாங்கள் கோட்டாபயவை வெளியே போக சொல்லும் அதேநேரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையையும் ஒழிக்க சொல்கிறோம். இது மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டுமே தவிர நிறைவேற்று ஜனாதிபதி முறைமை உடையதாக இருக்க கூடாது. இந்த விடயங்களில் நாங்க தெளிவாக இருக்கின்றோம். இவை இரண்டும் தான் எங்களுக்கு முக்கியம்.”என தெரிவித்துள்ளார்.