கோட்டாபயவுக்கு எதிரான ”கிளாஸ்கோ” ஆர்ப்பாட்டம் வெற்றிப்பெறவில்லை : இலங்கையின் ஆங்கில ஊடகம்
ஸ்கொட்லான்ட், கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நடத்தப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் முற்றாக தோல்வியடைந்ததாக இலங்கையின் ஞாயிறு ஆங்கில செய்தித்தாள் தொிவித்துள்ளது.
சுயாதீன அரசியல் அவதானிகள் என்போரைக் கோடிட்டு இந்த செய்தியை அது வெளியிட்டுள்ளது.
மாநாட்டு மையமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் உயர் பாதுகாப்புப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டமையால், ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கையின் ஜனாதிபதிக்கு அருகில் செல்ல முடியவில்லை.
ஜனாதிபதி தங்கியிருந்த விடுதிக்கு முன்பாக சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2010 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் ஆா்ப்பாட்டக்காரா்கள், ஆயிரக்கணக்கான மக்களைக் கொண்டு வந்து பிரிட்டிஷ் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தனர்
எனினும், இந்த முறை அவர்கள் மோசமாகத் தோல்வியடைந்துள்ளனர் என்றும் ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது..
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அதிருப்தியடைந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தம்முடன் கைகோர்ப்பார்கள் என விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் எதிர்பார்த்தனா்.
எனினும் அவர்களால் தமது ஆதரவைத் திரட்ட முடியவில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐக்கிய இராச்சியக் கிளையின் தலைவர் லசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், குளோபல் ஸ்ரீலங்கா ஃபோரம், ஸ்கொட்லாந்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவை ஆதரித்து, ஸ்கொட்லாந்தில் அதிகம் பரப்பப்படும் செய்தித்தாளில் "தி ஹெரால்ட்" இல் முழுப் பக்க கட்டண விளம்பரத்தை வெளியிட்டதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
அதில் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் உட்பட்ட நேஸ்பி பிரபு (Lord Naseby) சா்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவா் போல் காஸ்டெல்லா( Paul Castella), மேஜர் ஜெனரல் ஜோன் ஹோம்ஸ்( Major General John Holmes), கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம்( British High Commission in Colombo ), மற்றும் சோ் டெஸ்மண்ட் டி சில்வா க்யூசி (Sir Desmond de Silva QC)ஆகியோரிடமிருந்து இலங்கை பற்றிய சாதகக் கருத்துக்களும் சோ்க்கப்பட்டிருந்தன.
